Varalakshmi Vratham 2025: இன்று வரலட்சுமி நோன்பு.. எந்த நேரத்தில் பூஜை செய்யனும்? வீட்டில் எப்படி சாமி கும்பிடனும்?
Varalakshmi Vratham 2025 Date and Time: இன்று வரலட்சுமி விரதம் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. வீட்டில் பூஜை செய்ய ஏற்ற நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு என்று ஏராளமான விசேஷ நாட்கள் வருகிறது. இருப்பினும், இந்த நாட்களை காட்டிலும் ஆடி மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டிற்கான வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8ம் தேதி வரும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இதன்படி, இன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமையில் இந்த வரலட்சுமி நோன்பு வருவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
வழிபடுவது எப்படி?
வரலட்சுமி விரதத்தை ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை வழிபடலாம். பக்தர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல வழிபடலாம். மாெத்தம் 2 முறைகளில் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளலாம்.

1. ஒருநாள் மட்டும் வரலட்சுமி விரதம் இருக்க விரும்புபவர்கள் மகாலட்சுமி படத்திற்கு மாலையிட்டு பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபடலாம்.
2. இரண்டாவதாக கலசபூஜை வைத்து வழிபடுவது ஆகும். மகாலட்சுமியின் திருவுருவ படத்தை வைத்து, கலசத்தில் சுத்தமான தண்ணீர் நிரப்பி அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடுவது. இன்று வரலட்சுமி விரதம் இருந்து நாளையும் கலசத்தை வீட்டில் வைத்து ஞாயிற்றுக்கிழமை புனர்பூஜை செய்து நிறைவு செய்யலாம்.
சில பக்தர்கள் நேற்றே அம்பிகையை வீட்டிற்கு அழைத்து இன்று வரலட்சுமி விரதம் மேற்கொண்டு நாளை புனர்பூஜை செய்து வரலட்சுமி விரதம் மேற்கொள்வார்கள்.
பூஜை செய்ய ஏற்ற நேரம் எது?
ஆகஸ்ட் 8ம் தேதியான இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை நல்ல நேரம் ஆகும். மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நல்ல நேரம் உள்ளது. கெளரி நல்ல நேரம் மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை உள்ளது. மாலையில் 6.30 மணி முதல் 7.30 மணி வரை உள்ளது. ராகு காலம் 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், எமகண்டம் 3 மணியில் இருந்து 4.30 மணி வரை உள்ளது.
பொதுவாக பூஜைகள் நல்ல நேரத்தில் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அந்த வகையில் காலை 9 மணி முதல் காலை 10.20 மணி வரை வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நேரம் ஆகும். மாலையில் வரலட்சுமி நோன்பு செய்ய விரும்பும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் செய்வது நல்லது ஆகும்.
எப்படி சாமி கும்பிட வேண்டும்?
பூஜைக்கு செல்வதற்கு முன்பு நன்றாக குளித்துவிட வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு பூக்கள் சூடி அலங்காரம் செய்ய வேண்டும்.
பின்னர், வாழையிலை இட்டு மகாலட்சுமிக்கு படைத்த நைவேத்தியங்களை இட வேண்டும். கலசம் வைத்து வழிபடுபவர்கள் கலசத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதன்மேலே தேங்காய், மாவிலை ஆகியவற்றை சேர்த்து பூஜையில் வைக்க வேண்டும். கலசம் வைத்து வழிபடாதவர்கள் அம்மன் படத்தை வணங்கினாலே போதும்.

பின்னர், பூஜைக்கான நேரத்தில் தீபாராதனை காட்டி குலதெய்வத்தை வணங்க வேண்டும். அதன்பின்பு, முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கி கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
நைவேத்தியமாக பொங்கல், சுண்டல் ஆகிய ஏதேனும் படைக்கலாம். புளியோதரை, வடை, சர்க்கரை பொங்கல் படைத்தாலும் சிறப்பு ஆகும்.





















