Pachai Amman Kovil: ஆடி மாத திருவிழா.. மும்முனி பச்சையம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
Mummuni Pachai Amman Mannarsami Temple: ஆடி மாதம் மூன்றாம் திங்கட்கிழமை அன்று, மும்முனி கிராம மக்களால் பச்சையம்மனுக்கு மிகப்பெரிய திருவிழா எடுக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள மும்முனி கிராமத்தில், பச்சையம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆடி மாதம்
ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான். ஆடி மாதம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் திருவிழா நிறைந்து காணப்படும். பக்தர்களும், பொதுமக்களும், பெண்கள் அனைவரும் ஆடி அம்மன் கோயில்களுக்கு படையெடுப்பது வழக்கம். குறிப்பாக ஆடி மாத திருவிழா என்பது, தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆடி மாதத்தின் பொழுது, பல்வேறு திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
ஆடி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் குலதெய்வத்தை, வேண்டி வந்தால் சந்ததி மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடி மாதம் தமிழ்நாடு முழுவதும், திருவிழாக்களால் நிறைந்து காணப்படுகிறது.
மும்முனி மன்னார்சாமி கோயில்
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம், மும்முனி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மும்முனி மன்னார்சாமி கோயில் (மும்முனி பச்சையம்மன் கோயில்) அமைந்துள்ளது. மும்முனி பச்சையம்மன் கோயில், பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஆடி மாதங்களில், மும்முனி பச்சையம்மன் கோயிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் படை எடுப்பது வழக்கம். மொட்டை அடித்து ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை காவு கொடுத்து, பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு அம்மனை வேண்டுவது வழக்கம்.
மும்முனி பச்சையம்மன் கோயிலில், மூன்று முனி சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வாழ்முனி, செம்முனி மற்றும் கருமுனி மிக பிரம்மாண்ட சிலை வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இக்கோயிலில் மூன்று முனி சிலைகள் இருப்பதால் இந்த ஊருக்கு மும்முனி என்ற பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது. பச்சையம்மனுக்கு ஆடி மாதத்தில் வரும் திங்கட்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக ஆடி மாதம் மூன்றாம் திங்கட்கிழமை அன்று, மும்முனி கிராம மக்களால் பச்சையம்மனுக்கு மிகப்பெரிய திருவிழா எடுக்கப்படுகிறது.
ஆடி மாதம் மூன்றாம் திங்கட்கிழமை
அந்த வகையில் நேற்று ஆடி மாதம் மூன்றாம் திங்கட்கிழமையை முன்னிட்டு, மும்முனி கிராம பொதுமக்களால் பச்சையம்மனுக்கு ஆடி மாத திருவிழா எடுக்கப்பட்டது. பச்சையம்மன் கோயில் அருகே உள்ள சுக நதி ஆற்றில் பூ கிரகம் ஜோடிக்கப்பட்டு, பம்பை உடுக்கை உள்ளிட்ட பாரம்பரிய வாத்தியங்கள் இசைக்க, மும்முனி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பச்சியம்மன் இறங்கி அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து சுகநிதி ஆற்றில் இருந்து ஊர்வலமாக பூங்கரகம் புறப்பட்டு, கோவிலில் மூன்று முறை வலம் வந்தது. மேலும் தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக ஆயிரக்கணக்கான பெண்கள் பச்சையம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மும்முனி பச்சையம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கீழ்சாத்தமங்கலம், மாம்பட்டு, வந்தவாசி, ஆராசூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கோயிலில் குவிந்தனர்.இந்த விழாவை முன்னிட்டு வந்தவாசி காவல்துறை சார்பில் , பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.