Tirupati: பக்தர்களே! திருப்பதி தரிசனத்துக்கு இனி Whatsapp-இல் டிக்கெட்.. இதோ விவரம்..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இனிமேல் இணையம் வழியாகவும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், ஆந்திராவின் அடையாளமாகவும் திகழ்வது திருப்பதி கோயில் ஆகும். தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் இந்த கோயிலில் ஆண்டுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில்:
திருப்பதியில் அடிக்கடி விசேஷ நாட்களாக இருப்பதால் சில சமயங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு டிக்கெட்டுகளை பெற முடியாமலும், சாமி தரிசனம் செய்ய இயலாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி கோயில் தேவஸ்தானம் ஏராளமான வசதிகளை கோயிலில் மேற்கொண்டு வருகிறது.
மேலும், சமீபத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக விஐபி தரிசன கலாச்சார்தை குறைக்க வேண்டும் என்று தேவஸ்தானத்திற்கு கோரிக்கை வைத்தார்.
வாட்ஸ் அப் மூலமாக சாமி தரிசன டிக்கெட்:
அந்த வகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு டிக்கெட்டுகளை மிக எளிதில் பெறும் வகையில் வாட்ஸ் அப் மூலமாக டிககெட் பெற்றுக்கொள்ளும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் விரைவில் ஏற்பாடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதியை பொறுத்தமட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். சாமி தரிசன டிக்கெட்டுகளை பெற முடியாத பக்தர்கள் கோயிலுக்கு நேரில் சென்று எஸ்.எஸ்.டி. டோக்கன் பெற்று அல்லது சர்வ தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.
எப்போது அமல்?
ஏற்கனவே திருப்பதி கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாக டிக்கெட்டுகள் பெறும் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வாட்ஸ் அப் வழியாகவும் பக்தர்கள் சாமி தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தினால் பக்தர்கள் மிகவும் எளிமையாக சாமி தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் பெறும் வசதியை அடுத்த 3 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. புத்தாண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.