(Source: ECI/ABP News/ABP Majha)
வைகாசி விசாகம்; திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை
வைகாசி விசாக திருவிழாவிற்கு மறுநாள் மீன் வாங்கி கோயில் வளாகத்தில் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையொட்டி வெளியூர்களிலிருந்து பாதயாத்திரையாக முருக பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் விரதத்தின் நிறைவாக மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள்வது வழக்கம்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. முருகப்பெருமான் பிறந்த ஜென்ம நட்சத்திரமே வைகாசி விசாக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாக திருவிழா தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட கிடைக்கும் பலன் ஒரே நாளில் கிடைக்கும் என்பது ஐதீகம். வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5:00மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடைபெறும்.
விசாக திருவிழாவான அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்பத்தில் எழுந்தருள்கிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. 23ம்தேதி அதிகாலை 4:00மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனைம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாரதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.
விசாக திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி ரோட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர் இதனால் கோயில் வளாகம் விழாக்கோலம் ஒன்று உள்ளது.
கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க கோயில் நிர்வாகம் தடை
வைகாசி விசாகத் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை வருகின்றனர். இந்த பக்தர்கள் விசாக திருவிழா தினத்தன்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். விசாக திருவிழாவிற்கு மறுநாள் மீன் வாங்கி கோயில் வளாகத்தில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். இந்தாண்டு கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.