ஆவணி 7ம் திருவிழா - சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
ஆவணி மற்றும் மாசித் திருவிழா காலங்களில் உருகு சட்டை சேவையாகி, வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மும்மூர்த்திகளாக காட்சித் தருவார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி 7ம்திருவிழா இன்று காலையில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சிகப்பு சாத்தி கோலத்துடன் வீதியுலா நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.
ஆவணி திருவிழாவின் 7-ம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார் அங்கு தீபாராதனைக்கு பிறகு ஏற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையின் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வெள்ளை சாத்தி-பச்சை சாத்தி
ஆவணி திருவிழாவின் 8-ம் நாளான நாளை அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற செப்டம்பர் 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.
உருகு சட்ட சேவை
திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் ஏழாம் திருநாள் அன்று சண்முகர் சன்னதி விட்டு வெளியே எழுந்தருள்வார். இங்கு சண்முகப் பெருமான் பஞ்சலோக திருமேனியாயினும், சிதம்பரம் நடராஜரை போல மூலவர் அந்தஸ்து பெற்றவர். எனவே இங்கு சண்முகப் பெருமான் எழுந்தருள்வது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆக மற்ற மூர்த்தங்களை எடுத்து வாகனங்களில் வைப்பது போல, இந்த சண்முகப் பெருமானை மூலஸ்தானத்தில் இருந்து எடுத்து வைப்பதில்லை. மாறாக உருகு பலகை என்ற ஒரு பெரிய பலகையை சண்முகர் எழுந்தருளி உள்ள பீடத்திலிருந்து சன்னதி வாயில் வரை போட்டு, சண்முகப் பெருமானை பலகை மீது இருத்தி சிறிது சிறிதாக ஆட்டி, ஆட்டி, அசைத்து பீடத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருள செய்வார்கள். இதனை காண கண்கள் கோடி வேண்டும். இதுவே உருகு சட்ட சேவை என்று சிறப்பிக்கப்படுகிறது.மேலும் சண்முகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா சென்று மீண்டும் சன்னதி திரும்பும் வரை உருகு பலகை யானது சன்னதியிலிருந்து வாயில் வரை நீட்டி போடப்பட்ட நிலையிலேயே இருக்கும். இதுவே உருகு சட்ட சேவை என்று சிறப்பித்து கூறப்படுகிறது.