(Source: ECI/ABP News/ABP Majha)
ரமலான் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி சிறப்பு தொழுகை
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கும் விதமாக புனித ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். குறிப்பாக ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.
ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பிருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரமலானை கடைப்பிடித்துள்ளனர். இந்த நோன்பு காலத்தில் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு சூரியன் மறைவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். அதன் முடிவில் ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் ரமலான் நாளில் ஏழை மக்களுக்கு அரசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த புனிதமிகு ரமலான் ஆண்டு முழுவதும் கொரோனா இல்லாத ஆண்டாகவும், சமூக நல்லிணக்கத்துடனும், சமூக நீதியுடனும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கும் விதமாக புனித ரமலான் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது.
குறிப்பாக திருநெல்வேலி மேலப்பாளையம், பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 22 இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை செய்தனர். மேலப்பாளையம் ஈக்தா திடலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெற்றனர். மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிறப்புத்தொழுகையின் பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..