குழந்தை இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் விரைவில் வீட்டில் தொட்டிலாடும்
படிப்பு என்றால் வேப்பாங்காயாக எண்ணும் மாணவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் நன்கு படிப்பார்கள் என்கின்றனர் ஊர் பெரியவர்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பனார் வரை வழிபட்ட அம்பாள்தான் உலகாண்ட ஈஸ்வரி. பக்தர்களைப் பிடித்த நோய்களையெல்லாம் ஓட ஓட விரட்டி ஓட்டும் பிடாரி அவள். அதனால்தான் அந்த ஊருக்கே ஓட்டப்பிடாரம் என்ற பெயர் வந்தது என்கின்றனர். உலகம்மாள், உலகநாதன் என அன்னையின் பெயரை வைப்பது இங்கு அதிகம் என்கின்றனர் பெரியோர்கள்.
சிறிய கோயில் என்றாலும் அற்புதமாக இருக்கிறது ஆலயம். வாசலில் ஈச்சமர உயரத்திற்கு கோட்டைக் கருப்பசாமி காவலுக்கு நிற்கிறார். அவருக்கு அருகே சங்கு ஊதியபடி ஆலி நிற்கிறான். வாயில் மண்டபத்தைத் தாண்டினால் நெடிதுயர்ந்த கதவுகளுடன் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் வேதாளத்தையும், வைரவரையும் தரிசனம் செய்யலாம். எதிரே ஆஸ்கார பலி காட்சியளிக்கிறது. கீழ்ப்பக்கத்தில் கன்னி விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தவசித் தம்பிரான், கொம்பு மாடன், கொம்பு மாடத்தி, பேச்சி, பிரம்ம சக்தி ஆகியோர் காவல் தெய்வங்களாக இங்கே காட்சிதருகிறார்கள். மண்டபத்துக்குள் கிழக்கு நோக்கி நல்ல மாடசாமி, பேச்சியம்மன், கருப்பசாமி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.கர்ப்பகிரகத்தில் உலகாண்ட ஈஸ்வரியம்மன் வடக்குத் திசை நோக்கித் தன் பெரிய விழிகளால் கோலோச்சி அருள்பாலிக்கிறாள். வேப்பமர நிழல் சூழ அம்பாள் கல்மண்டபக் கருவறையில் எழிலாக அமர்ந்திருக்கிறாள். இவளது சிறப்பை வ.உ.சி தனது எழுதிய சுய சரிதையில் `வேண்டிய எல்லாம் வேண்டியாங்களிக்கும் உலகம்மை` என்று பரவசப்பட்டு எழுதியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில்தான் இந்த அம்மன் முதலில் கோயில் கொண்டிருந்ததாகவும், அங்கிருந்து இங்கே குடிபெயர்த்த கிராமத்தார்கள், ஆற்றல்மிகு உலகம்மனையும் அழைத்து வந்து விட்டார்கள் என்றும் தல புராணம் கூறுகிறது. இந்த ஊரின் பழைய பெயர், வீரபாண்டியபுரம். உலகம்மை இங்கே குடிகொண்டதிலிருந்து ஓட்டப்பிடாரம் என்று மாறிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசித் திங்களில் நவராத்திரி விழாவும், ஆடி மாதம் முளைக்கொட்டுத் திருவிழாவும், பங்குனி மாதம் கடைசி செவ்வாயில் கொடை விழாவில் அம்மனுக்குப் பாலாபிஷேகமும் நடைபெறும். பங்குனி கடைசித் திங்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவார்கள்.
வெண்பாவிற்குப் புகழேந்தி, சிலேடைக்குக் காளமேகம் என்பது போல கசப்புக் கவிதைகளுக்கு, ஆண்டான் கவிராயர் என்று சொல்வார்கள். அந்த ஆண்டான் கவிராயர் பிறந்த ஊர் இந்த ஓட்டப்பிடாரம்தான். ஆண்டானுக்கு அதுவும், பழுத்த பிரம்படி. அடித்தவர், திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்தான். ஆண்டானுக்குச் சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறவில்லை. ஆண்டான், நன்கு படித்த பண்டிதர் வீட்டில் பிறந்தவன்தான். ஆனால், இவன் மட்டும் இப்படியிருக்கிறானே என்ற கவலை ஆசிரியருக்கு. அடி பின்னியெடுத்து விட்டார்.ஆண்டான். அடியில் வலி பொறுக்க முடியாமல் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி வந்து விட்டான்.வீட்டுக்குப் போனால் அப்பா அடிப்பாரே! அதனால், நேராக உலகாண்ட ஈஸ்வரியின் கோயிலுக்குச் சென்று விட்டான்.கோயிலுக்குள் நுழைந்தவன், இங்கேயும் தன்னைத் துரத்திக் கொண்டு வாத்தியார் வந்து விடுவார் என்று பயந்தானோ என்னவோ, நேராய் கர்ப்பகிருகத்தினுள் நுழைந்த ஆண்டான், உள்ளே நுழைந்ததும் கதவைப் பூட்டி உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான். அந்த நேரத்தில் உலகாண்ட ஈஸ்வரி, கோயிலில் இல்லை. அவள்தான் ஊர்க் காவலுக்கு வெளியில் சென்று விட்டாளே?ஊரைச் சுற்றி முடித்த தேவி, ஆலயத்திற்குத் திரும்பினாள். தன் கர்ப்பகிரகத்தின் கதவுகள் உட்பக்கம் இறுக மூடித் தாழிடப்பட்டிருப்பதைக் கண்டாள், உலகாண்ட ஈஸ்வரி. கதவைத் திற என்றாள். உள்ளேயிருந்த ஆண்டானின் நா தடுமாறியது. அம்மா, தாயே, நான் மக்குப் பிள்ளையாக இருக்கிறேன். பாடங்கள் எல்லாம் என் நாவினில் ஏறவில்லை. எனக்குக் கல்வியையும் புலமையையும் நீ தந்தால்தான் கதவைத் திறப்பேன் என்று பிடிவாதம் பிடித்தான். உலகம்மை புன்னகைத்துக் கொண்டாள். உன் நாவை நீட்டு என்றாள். சந்தேக புத்தி கொண்ட ஆண்டான் கதவைத் திறக்காமல் சாவித் துவாரம் வழியாக தன் நாக்கை நீட்டினான். உலகம்மை மீண்டும் புன்னகைத்தாள். அருகிலிருந்த வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியைப் பறித்து அவனது நாவில் புலமை பெறுக என்று எழுதினாள்.
தமிழில் வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தத்துக்குக் கம்பன், கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தர், கலம்பகத்திற்கு இரட்டைப் புலவர்கள். இந்த வரிசையில் வசைகவிக்கு எனத் தனியாகப் பெயர் பெற்றவர் ஒருவரும் இல்லை. காளமேகம் சில வசைகவிகள் பாடினாலும், அவர் சிலேடை கவிக்குப் பெயர்போனவர். வசைகவியைத் தொல்காப்பியர் தனது இலக்கண நூலில் அங்கதம் என்று குறிப்பிட்டு அதற்குத் தனி இலக்கணத்தையே சொல்லியிருக்கிறார். அந்தத் தொல்காப்பியத்தை அடியொற்றி முழுக்க முழுக்க வசைகவியை மட்டுமே பாடியவர், வசைகவி ஆண்டானைத் தவிர வேறு எவரும் இல்லை. இப்படி தெய்விகத் தமிழ்மொழியில் வசைகவி இல்லாத குறையைத் தீர்க்க, வசைகவி ஆண்டானைத் தந்து, ஆண்டானுக்குத் தந்த வரத்தை சோதிக்கத் தன்னையே தந்து, செந்தமிழை மேலும் அழகாக்கிய ஓட்டப்பிடாரம் காளியின் அருளைப் புகழ வார்த்தையே இல்லை.
குழந்தை இல்லாதவர்கள் இந்த கோயிலில் குழந்தை உருவிலான மண் பொம்மையை தலைமையில் சுமந்து வைத்து மூன்று முறை சுற்றி வந்தால் வழிபட்டால் விரைவில் வீட்டில் தொட்டிலாடும் என்கின்றனர் பயன்பெற்ற பக்தர்கள், அதே போன்று மஞ்சள் துணியை தொட்டில் செய்து கோவில் முன்புள்ள மரத்தின் கிளைகளில் கட்டி விட்டால் அம்மன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். படிப்பு என்றால் வேப்பாங்காயாக எண்ணும் மாணவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் நன்கு படிப்பார்கள் என்கின்றனர் ஊர் பெரியவர்கள். இந்த அன்னையை நாமும் வணங்கு வோம், வாழ்வில் எல்லா நலமும் பெறுவோம்.