(Source: ECI/ABP News/ABP Majha)
Thiruthani Murugan Temple: மயில், வேல் இல்லாத அறுபடை கோயில்... திருத்தணி முருகர் கோயில் சிறப்பம்சம் தெரியுமா ?
Thiruthani Murugan Temple: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகரின் ஐந்தாம் படைவீடு பற்றி தெரிந்து கொள்வோம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள, அருள்மிகு சுப்பிரமணிய சுவமி திருக்கோயில் முருகரின் ஐந்தாம் படை வீடாக திகழ்ந்து வருகிறது .
திருத்தணி முருகர் கோயில்
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன. அறுபடை கோயில்களில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிக முக்கிய கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்கி வருகிறது. தேவர்களை அச்சுறுத்தி வந்த, சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து வள்ளி மற்றும் தெய்வயானியுடன் சாந்த சொற்பமாக காட்சியளிக்கும் கோயிலாக இக்கோயில் உள்ளது.
முருகன் சினம் தணிந்து காட்சியளித்ததால், திருதணிகைமலை என அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த பெயர் மருவி தற்பொழுது திருத்தணியாக, அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் முருகருக்கு வேல் இருக்காது. சாந்த ரூபாய் காட்சியளிப்பதால் முருகர் வேல் இல்லாமல் காட்சி தருவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலின் தலை விருச்சகமாக மகுடமரம் திகழ்ந்து வருகிறது.
கடைசியாக காட்சியளிக்கும் விநாயகர்
அனைத்து கோயில்களிலும் விநாயகர் சிலை என்பது முதலில் இருக்கும். விநாயகரை வழிபட்ட பிறகு, மூலவரை வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் திருத்தணி கோயிலில் மட்டும், விநாயகர் கடைசியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ‘ஆபத்சகாய விநாயகர் ' இங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தல வரலாறு கூறுவது என்ன ?
முன்பொரு காலத்தில் திருத்தணி மலைப்பகுதியில் வேடர்களின் தலைவனாக நம்பிராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். நம்பிராஜன் காட்டுப்பகுதிக்கு சென்ற பொழுது, வள்ளி கொடியில் பெண் குழந்தை கிடைத்துள்ளது. இக்குழந்தையை கடவுள் கொடுத்த வரமாக கருதி நம்பிராஜன், வள்ளி என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தார். வள்ளிக்கு திருமணம் வயது எட்டியுடன், வள்ளியை ஆட்கொள்ள முருகன் முடிவு செய்தார்.
இதனை அடுத்து முதியவர் வேடத்தில் வந்து பள்ளியிடம் திருவிளையாடலை தொடங்கினார். முருகருக்கு உதவியாக தனது அண்ணன், விநாயகர் யானை உருவம் எடுத்து, காட்டுப்பகுதியில் வள்ளி துரத்தி சென்றார். அப்பொழுது அங்கிருந்த முதியவரை பயத்தில் வள்ளி தழுவ, முருகன் தனது உண்மையான உருவத்தை வள்ளிக்கு வெளிப்படுத்தினார். அப்பொழுது வள்ளியும் முருகன் மீது காதல் வயப்பட , இருவருக்கும் தேவர்கள் ஆசியுடன் திருமணம் நடந்தேறியது.
மயில் இல்லை...
வருடத்தில் 365 நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிக்கட்டுகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு. இந்திரன் திருமண பரிசாக தனது வெள்ளை நிற யானையை முருகன் மற்றும் வள்ளி தேவனுக்கு அளித்ததாக புராணம் கூறுகின்றன. எனவே இந்த கோயிலில் மயிலுக்கு பதிலாக யானை வாசலில் காட்சியளிக்கிறது. முருகனை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட கல்ஹார தீர்த்தம் மலையில் உள்ளது. திருத்தணிகை தளம் என்பதால், மூலவருக்கு கையில் வேல் இருக்காது. அலங்காரத்திற்காக மட்டுமே வேல் வைக்கப்படுகிறது .
போரால் ஏற்பட்ட நெஞ்சில் பள்ளம்..
திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, சினம் தணிந்து காட்சியளிக்கும் தலமாக திருத்தணி விளங்கி வருவதால் , போரில் அசுரனுடன் மோதியதால் முருகன் நெஞ்சில் ஏற்பட்ட பள்ளம் இப்பொழுதும் மூலவர் சிலையில் காணப்படுகிறது. அதேபோன்று திருத்தணி முருகர் கோயிலில், விஷ்ணு துர்க்கை சிலை காட்சியளிப்பதும் அரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.