Thiruppavai 12: சேற்றிலே கால்கள்.. பனிப்பொழிவு தலையில் இதற்கிடையில் எழுப்புகிறோமே பெண்ணே... எழுந்து வருவாயாக...
Margali 11: மார்கழி மாதம் 12வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.
பதினொன்றாவது பாடல் மூலம், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட தலைவனை வணங்க செல்ல, தூக்கத்தில் இருந்து எழுந்து வருவாயாக என தோழியை எழுப்பிய ஆண்டால், பன்னிரண்டாவது பாடலில், தோழிகள் படும் சிரமத்தை கூறி எழுப்புவது போல பாடல் அமைத்திருக்கிறார்.
பன்னிரண்டாவது பாடல் விளக்கம்:
தனது கன்றை நினைத்து உடனே, எருமை மாடானது தானாகவே பால் சுறக்கிறது. அந்த பாலானது, வீட்டு வாசலை நனைத்து சேறாக்கி விட்டது. அந்த சேற்றில் நின்று கொண்டு பெண்ணே உன்னை எழுப்புகிறோமே என்று பிற தோழிகள் கூறுவது போல ஆண்டாள் பாடல் அமைத்திருக்கிறார். ஆண்டாள், மாடு வளர்க்கும் ஆயர் குலத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்குரிய பகுதியை வைத்து பாடல் அமைத்திருக்கிறார்.
இதையடுத்து, தூங்குகின்ற தோழியிடம், உனக்காக தலையில் விழுகின்ற பனித்துளியையும் தாங்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கின்றோம் என தோழிமார்கள் கூறுகின்றனர்.
இக்காலை பொழுதில் நீராடி இறைவனை வணங்க செல்ல வேண்டும். அதனால், சேற்றையும் மிதித்து கொண்டு, குளிரையும் தாங்கி கொண்டு, மனத்திலே இறைவனையும் நினைத்து கொண்டு ஆகிய மூன்றையும் தாங்கி கொண்டு, உன்னை எழுப்புகிறோமே, இன்னும் உறங்குகிறாயே, நீ எழுந்து வருவாயாக என பிற தோழிகள் கூறுகின்றனர்.
இப்பாடல் மூலம், மார்கழி மாதத்தில் நிகழும் குளிரை காட்சிப்படுத்தியும், அவர்கள் செய்யும் தொழிலையும், அதில் கன்றின் மீது அதன் தாய் கொண்ட பாசத்தையும் பாடலாக கண்முன்னே ஆண்டாள் காட்சி படுத்துகிறார்.
மேலும், நாம் வைத்து குறிக்கோளை அடைய எத்தனை துன்பங்கள் வந்தாலும், தளர கூடாது என ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார்.
திருப்பாவை பன்னிரண்டாவது பாடல்:
கனைத்து இளங்கற்றெருமை
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனததுக் கினியானைப் பாடவும் நீவாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 11: மார்கழி 11...தொழில் தர்மத்தையும் தீமைகளை எதிர்ப்பவனையும் போற்றுவர்: இன்றைய திருப்பாவை!...