(Source: ECI/ABP News/ABP Majha)
Anumantharaya Perumal Temple: சுயம்பு வடிவில் தோன்றிய அனுமந்தராய பெருமாள் கோயில் எங்குள்ளது? - சிறப்புகள் என்ன?
குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், காரியசித்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிவர்த்தி ஆவதாக நம்பப்படுகிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அனுமந்தராய பெருமாள் கோயில். இது மிகவும் சிறப்பு வாய்ந்த, பிரபலமான கோயிலாகும். பொதுவாக இந்த கோயிலில் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால் அதிகளவிலான பக்தர்கள் சனிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு வருவது வழக்கம். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சுயம்பாக அனுமந்தராயர் தோன்றியதாக கூறப்படுகிறது. பூஞ்சாத்து தம்பிரான் அரசர் காலத்தில் இக்கோயில் அமைந்து இருக்கும் இடத்தில் இருந்த பெரிய அரச மரத்தை வெட்டும் பொழுது அந்த மரத்தில் இருந்து குருதி வெளியேறி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக மரத்திற்கு பரிகாரம் செய்து மீண்டும் மரத்தை வெட்டத் தொடங்கி உள்ளனர். அப்போது அந்த மரத்திற்கு அடியில் இருந்து அனுமந்தராயர் சுயம்பாக தோன்றியதாக கூறுகின்றனர். மரத்திற்கு அடியில் அனுமந்தராயர் வீற்றிருக்கிறார் என்பதை அறிந்த நபர்கள் அந்த இடத்தில் சிறிய அளவில் பீடம் ஒன்றை மட்டும் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் அக்கோவில் காலப் போக்கில் பூமிக்கடியில் புதையுண்டு உள்ளது. அதற்குப் பின்பாக வியாஸராய மஹரிஷி என்பவரால் சிறிய அளவில் இந்த அனுமந்தராய பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அக்கோவிலும் காலப் போக்கில் பூமிக்கடியில் புதைந்து உள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் அர்ச்சகர்கள் இக்கோயிலுக்கு வந்து தலைமுறை தலைமுறையாக ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பூஜை செய்து வந்துள்ளனர். அதற்குப் பின்பாக 1948 ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி அய்யனார் பெரிய அளவிலான அனுமந்தராய பெருமாள் கோவிலை கட்டியுள்ளார். தற்போது இக்கோயில் 30வது தலைமுறையைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகரான வெங்கட்ராமன் அனுமந்தராயருக்கு பூஜை செய்து வருகின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், காரியசித்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிவர்த்தி பெறுவதால் கோயிலின் புகழ் தேனி மாவட்டத்தை கடந்து வெளி மாவட்டங்களுக்கும் பரவியதால் இக்கோயிலுக்கு அதிகப்படியான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகை தருகின்றனர்.
குறிப்பாக இங்கு வரக்கூடிய பக்தர்கள் சனிக்கிழமை நாளில் செந்தூரம், குங்குமம், மஞ்சள் பொடி மற்றும் ஆஞ்சநேயருக்கு பிரதானமான வாழைப்பழம் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்யலாம் எனவும், காரிய தடை உள்ளவர்கள் ஒரு பாக்கு இரண்டு வெற்றிலைகளை 24 ஜோடியாக கட்டி வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கலாம் என்கின்றனர். ஆஞ்சநேயருக்கு உகுந்த சிறப்பு நாட்களில் நடைபெறும் அபிஷேகங்கள், நெய்யபிஷேகம், அனுமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டும் நேரத்தில் பக்தர்கள் வழிபாடு செய்யும் போது காரிய தடை விலகும் எனவும் கூறப்படுகிறது.