‘இவங்க என் மக்கள்... எப்போதும் நான் பாதுகாப்பாக இருப்பேன்’.. கவலையை போக்கும் வில்லாயி அம்மன்
தற்போதைய காலக்கட்டத்தில் பெயர் சூட்டுவதில் ஏற்பட்டுள்ள நாகரீக மாற்றத்தால் அம்மனின் முதல் எழுத்தான "வி" என்ற எழுத்தை குழந்தைகளுக்கு வரும்படி பெயர் வைக்கின்றனர்.
தஞ்சாவூர்: இது என் மக்கள்... இவர்களுடன் நான் எப்போதும் இருப்பேன் என்று எட்டு திசைகளிலும் வாழ்ந்து வரும் தன் கிராம பெண்களை அவர்களுடனேயே இருந்து காத்து அவர்களின் கவலைகளை போக்கி நன்மைகள் அளித்து வருகிறார் தஞ்சை மாவட்டம் காசவளநாட்டின் மேற்கு எல்லையில் வேங்கராயன் குடிக்காட்டில் காவல் தெய்வமாக கோயில் கொண்டுள்ள வில்லாயி அம்மன். தங்களை பாதுகாப்பு தெய்வமே இவர்தான் என்று மக்களும் அசைக்க முடியாத நம்பிக்கையை இவர் மீது கொண்டுள்ளனர்.
வேங்கராயன்குடிக்காடு வில்லாயி அம்மன்
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் செல்லும் சாலையில் 10 வது கிலோ மீட்டரில் உள்ளது வேங்கராயன்குடிக்காடு. இக்கிராமத்தில் நடுநாயமாக கோயில் கொண்டு தன் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி அருள் பாலிக்கிறார் வில்லாயி அம்மன். காசவளநாட்டின் 18 கிராமங்களிலேயே வித்தியாசமாக பெயரை கொண்ட அம்மன்தான் இந்த வில்லாயி.
ஊரையும், ஊர் மக்களையும் காக்கும் இந்த அம்மனின் பெயரை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தங்களது குழந்தைகளுக்கு இன்றளவும் இக்கிராம மக்கள் சூட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. தங்கள் குழந்தைகளுடன் எப்போதும் இருந்து காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு வில்லம்மாள், வில்லாயி எனவும் ஆண் குழந்தைகளுக்கு வில்லப்பன் எனவும் பெயர் சூட்டி வருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அம்மன் பெயரை குழந்தைகளுக்கு சூட்டும் மக்கள்
தற்போதைய காலக்கட்டத்தில் பெயர் சூட்டுவதில் ஏற்பட்டுள்ள நாகரீக மாற்றத்தால் அம்மனின் முதல் எழுத்தான "வி" என்ற எழுத்தை குழந்தைகளுக்கு வரும்படி பெயர் வைக்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு முதல் முடிகாணிக்கையும் இந்த கோயில் சன்னதியிலேயே வேண்டுதலாக இறக்கப்படுகிறது. இந்த ஊரில் பிறந்த பெண்கள் எங்கு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும், பொங்கல் உள்ளிட்ட திருவிழாவின் போது ஊருக்கு வந்து வில்லாயி அம்மனுக்கு மாவிளக்கு போட்டும், தீபம் ஏற்றியும் தங்களுடைய பிரார்த்தனையை முன்வைத்தும், வேண்டுதல் நிறைவேறிய பின்னர் அதற்கான காணிக்கைகளையும் செலுத்தி வருகின்றனர். இக்கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த பக்தர்களும் இக்கோயிலுக்கு தேடிவந்து தங்கள் வேண்டுதல்களை வைக்கின்றனர்.
நல்லேர் பூட்டும் நிகழ்வு
மார்கழி மாதம், பொங்கல் திருவிழா இக்கோயிலில் சிறப்பாக நடக்கிறது. பொங்கல் திருவிழாவில் இவ்வூரில் வசிக்கும் மக்கள் வில்லாயி அம்மனிடம் தங்கள் வேண்டுதலை வைத்து முடிகாணிக்கை, தானியங்கள் காணிக்கை, ஆடு, மாடு, கோழி என காணிக்கைகளை செலுத்துவண்டு. அன்றைய தினம் ஊர் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இதேபோல் பங்குனி உத்திர விழா, தமிழ் வருட பிறப்புக்கு கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தமிழ் வருட பிறப்பு அன்று நல்லேர் பூட்டும் நிகழ்வு இந்த கிராமத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் நல்லபடியாக செழிக்க வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொண்டு நவதானியங்களை விதைத்து சிறிது பரப்பளவில் நல்லேர் பூட்டி கொண்டாடிய பின், அந்த ஏர் கலப்பைகளை வில்லாயி அம்மன் கோயிலுக்கு முன்பு கொண்டு வந்து வைத்து, அம்மனிடம் ஆசி பெற்று செல்கின்றனர் இவ்வூர் மக்கள்.
பல்வேறு பெருமைகளை தன்னுள்ளே கொண்டு அருள்பாலித்து வரும் வில்லாயி அம்மன் கோயில் பெருமைகளை கேள்விப்பட்டு பிற கிராமங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து வில்லாயி அம்மனை தரிசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை வாரந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் பெண்கள் சார்பில் நடத்தப்பட்டு, அன்றைய தினம் கோயில் வளாகத்திலேயே தங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என பெண்களால் நம்பப்படுகிறது. அதை இன்றளவும் கடைப்பிடித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். திருமண தடை, மாங்கல்ய தோஷம், புத்திரபாக்கியம், உடல் நலக்கோளாறு ஆகியவற்றுக்காக மாதந்தோறும் பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜையும், யாகமும் இக்கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது.
வில்லாயி அம்மனுக்கு நடத்தப்படும் பாலபிஷேகம்
இவ்வூரின் புனித தீர்த்தமான காசாம்பள்ளம் என்ற திருக்குளத்திலிருந்து பால்குடம் எடுத்து ஊர் முழுவதும் உலா வந்து பின்னர் வில்லாயி அம்மனுக்கு பாலபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமை, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என ஆண்டு முழுவதும் வில்லாயி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.