திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோயில் தைப்பூச தீர்த்தவாரி
காவிரி ஆற்றில் திருவாடுதுறை ஆதீனம் மற்றும் காவிரியின் இரு கரைகளிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவிைடமருதூர் மகாலிங்க சாமி கோவில் தைப்பூச தீர்த்தவாரியையொட்டி ஆயிரக்கணக்கானோா் காவிரியில் புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா 10 நாட்கள் சிறப்பாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தீா்த்தவாரி நடந்தது. முன்னதாக காலை 10:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலாவாக புறப்பட்டு திருவிடைமருதூர் காவிரி கரையில் எழுந்தருளினர்.
அப்போது வழி நெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஞ்சமூர்த்திகளுடன் புனித நீராட காவிரியை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். புனித நீராடினர் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியம் பஞ்சாமிர்தம், பால், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது காவிரி ஆற்றில் திருவாடுதுறை ஆதீனம் மற்றும் காவிரியின் இரு கரைகளிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர்.
அப்போது காவிரியின் வடகரையில் கல்யாணபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் அம்பாளுடன் எழுந்தருளினார். விழாவையொட்டி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் ரப்பர் படகுகளுடன் வலம் வந்து யாராவது தண்ணீரில் மூழ்குகிறார்களா என கண்காணித்தனர். தைப்பூச தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சுவாமிமலை: முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாக, தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில், தைப்பூச விழா, ஜன., 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணிய சுவாமிகள் நான்கு வீதிகளில் வீதியுலா சென்று, காவிரி ஆற்றுக்கு வந்தார். அங்கு அஸ்திரத்தேவருக்கு, 21 வகையான மங்கலப் பொருட்கள் அபிஷேகங்கள், தீர்த்தவாரி நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
மேலும், கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று, சுவாமிகள் யதாஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று தைப்பூசத்தை ஒட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.