மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா - பெருவுடையாருக்கு 48 வகை பேரபிஷேகம்
மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா... பெரிய கோயிலில் பெருவுடையார்- பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
தஞ்சாவூர் பெரியகோயிலில் நேற்று நடைபெற்ற 1037வது சதய விழாவில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பெருவுடையார் – பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம் நடத்தப்பட்டது.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமைய உயர்த்தும் வகையில் பெரிய கோவிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜ சோழன்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது.
இந்த கோவிலின் கட்டுமானம் குறித்து உலக கட்டிக்கலை வல்லுநர்கள் இப்போதும் வியந்து பேசுகின்றனர். மாமன்னன் ராஜராஜ சோழன், கட்டடக்கலை, நீர் மேலாண்மை உள்ளிட்டைவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த ஆட்சியினை வெளிப்படுத்தியவர்.
அந்தக் காலத்திலேயே நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து மழை நீர் சேமிப்பு முறையைக் கையாண்டவர். தனித்திறனுடன் புரிந்த ஆட்சியின் மூலம் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர். பொன்னியின் செல்வன் என்று போற்றக்கூடிய மாமன்னர் ராஜராஜ சோழன். இவர் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 ஆவது சதய விழா நேற்று தொடங்கியது. முதல்நாளில் கருத்தரங்கம், கவியரங்கம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஐப்பசி மாத சதய நாளாகிய இன்று வியாழக்கிழமை காலை மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில், கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்தார். தொடர்ந்து, ராஜராஜசோழன் சிலைக்கு 70க்கும் அதிகமான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, மணிமண்டப வளாகத்திலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கும் ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீனத்தின் 27}ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், யானை மீது திருமுறைகளை வைத்து ஊர்வலமாக சென்று மீண்டும் கோயில் வளாகத்தை அடைந்தது. இதில், 48 ஓதுவார்கள் கலந்து கொண்டு திருமுறைப்பண்களைப் பாடி வந்தனர்.
இதனிடையே, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பால், தயிர், வெண்ணெய், நெய், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, வில்வம், தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், நவகவ்யம், திரவியப் பொடி, வாசனைப் பொடி, பஞ்சாமிர்தம், இளநீர் உள்பட 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிற்பகலில் பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருவுடையார், பெரியநாயகி திருவுருவச் செப்புத் திருமேனிகள் திருவீதி உலாவும் நடைபெற்றன.