பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற தஞ்சை பெரியகோயில் தேரின் கண்கொள்ளா காட்சி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க சிறப்பாக நடந்தது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பெருவிழாவுக்காக கடந்த 17ம் தேதி தஞ்சாவூர் பெரியகோயிலில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலுக்குள்ள புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. கடந்த 29ம் தேதி காலை சந்திரசேகரர் வெண்ணெய்தாழி அலங்காரமும், மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், ஓலைச்சப்பரத்தில் சந்திரசேகரர் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.
இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. காலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளினர்.
விதவிதமான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருள, காலை 6.40 மணியளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். எஸ்.பி., ஆஷிஷ் ராவத், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் , ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது. 4 ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மதியம் தேர் நிலையை வந்தடைந்தது. தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது. விழாவில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மண்டல தலைவர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளை 2ம் தேதி சந்திரசேகரர் புறப்பாடு, நாளை 3ம் தேதி காலை தியாகராஜர் பந்தல் காட்சியுடன் யதாஸ்தான பிரவேசமும், மாலை நடராஜர் வெள்ளை சாத்தி புறப்பாடும் நடைபெறுகிறது.
4ம் தேதி சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரியுடன் கொடியிறக்கத்துடன் 18 நாள் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்