Thanjapureeswarar Temple: பணக்கஷ்டத்தை நீக்கி பக்தர்கள் கவலையை போக்கும் ஆனந்தவல்லி அம்மன் சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயில்
லஷ்மி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களுக்கு நம்பிக்கை நிலவுகிறது.
தஞ்சாவூர்: மனக்கஷ்டம் இருந்தால் கூட நாளடைவில் மாறிவிடும் ஆனால் பணக்கஷ்டம் இருந்தால் வாழ்க்கை முழுவதும் வேதனைதான். இந்த வேதனையை போக்கி பணக்கஷ்டத்தை நீக்கி பக்தர்கள் கவலையை போக்கிறார் தஞ்சாவூரிலிருந்து பள்ளியக்ரஹாரம் செல்லும் வழியில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள தஞ்சபுரீஸ்வர சுவாமி. இக்கோயில் இறைவன் பெயர் தஞ்சபுரீஸ்வரர். இறைவி பெயர் ஆனந்தவல்லி அம்மன்.
பிரம்மாவின் மானச புத்திரன் புலஸ்திய மகரிஷி ஆவார். இவரது மைந்தன் விஸ்வாரஸ். இவரும் ரிஷிதான். இவர் முனிவர் குலத்தில் பிறந்திருந்தாலும், கைகேசி என்ற அரக்க குல பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன் என்ற மகன்களும், சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர். பின்னர், விபீஷணனும், குபேரனும் மகன்களாகப் பிறந்தனர்.
ராவணனும், குபேரனும் தீவிர சிவ பக்தர்கள். விபீஷணன் விஷ்ணு பக்தன். கும்பகர்ணன் பிரம்மாவின் பக்தன். இதில் ராவணன் தீவிர தவம் இருந்து சிவபெருமானிடம் தனக்கு மனிதரால் மட்டுமே மரணம் கிடைக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.
குபேரன் தன் தீவிர சிவ பக்தியால் பெரும் செல்வத்தையும், அரசையும் பெற்றான். குபேரனுடைய நகருக்கு அழகாபுரி என்று பெயர். மேலும் அளகை என்றும் இந்த நகர் அழைக்கப்பட்டது. தேவசிற்பி மயனால் மிக அழகிய தோற்றத்துடன் கூடிய அரண்மனையும் குபேரனுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் தனது தம்பியின் செல்வ வளத்தை கண்டு ஆத்திரமடைந்த அண்ணன் ராவணன், குபேரனின் அரசைப் பறித்துக் கொண்டு அவனை விரட்டி விட்டான்.
தனது செல்வ வளத்தை இழந்த குபேரன் மீண்டும் தன் பதவியைப் பெறுவதற்காகப் பல்வேறு சிவத்தலங்களுக்குச் சென்று தவமிருந்தான். அப்படி குபேரன் கடைசியாக வந்து தவமிருந்த தலம் இத்தலம். இதில் சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவபெருமானிடம், நீயே துணை! நான் உனது தஞ்சம்! என காலில் வீழ்ந்து கதறித் தவமிருந்தான் குபேரன்.
இந்தத் தலம் வராஹ புராணத்தில் சமீவன் ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குபேரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவனை வடதிசைப் பாலகனாகவும், நவநிதியையும் காக்கும் வரத்தையும் அளித்தார்.
தஞ்சம் என்று தன்னை வந்தடைந்த குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் தஞ்சபுரீஸ்வரர் என்றும், குபேரபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார். அதேபோல்தான் இந்த நகரமும் குபேரன் வழிபட்டதன் நினைவாக அழகாபுரி என்றும், அளகை எனவும் அழைக்கப்பட்டது. இந்தத் தலமும் குபேரன் பட்டணம் போலவே மிகச் சிறப்பாக விளங்கியது என்று புராணங்களில் தெரிவிக்கப்படுகிறது.
ஐப்பசி மாத அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்தது. சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. அதனால்தான் இந்த கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்று லஷ்மி குபேர யாகம் நடைபெறுகிறது.
இந்த லஷ்மி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களுக்கு நம்பிக்கை நிலவுகிறது. அதனால் இக்கோயிலில் தீபாவளி நாளில் நடைபெறும் குபேர யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.