தை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள், தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது. பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு. ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
இந்த ஐதீகத்தின்படி வருடம் தோறும் கை அம்மாவாசை அன்று இறந்த தங்களது முன்னோர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு தர்ப்பணம் கொடுத்தால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும், அவர்களின் முழுமையான ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அது மட்டுமில்லாமல் நம்மளுடைய குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நமது முன்னோர்களின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம் என்பது சொல்லப்படுகிறது. அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.
திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு தை, ஆடி, புரட்டாசி உள்ளிட்ட அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த வகையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி வாழை இலை, பூஜை பொருட்கள், அகத்தி கீரை உள்ளிட்ட மங்கள பொருட்களை வாங்கி சென்று ஆர்வமுடன் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அதேபோல், அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.