Soorasamharam 2024 வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முருகப்பெருமான் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி சூரசம்கார விழாவில் காண கரூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷங்களை எழுப்பியவாறு முருகப்பெருமானை மனம் உருகி தரிசனம் சென்றனர்.
கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முருகப்பெருமான் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் வெண்ணமலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கடந்த 02-ஆம் தேதி சிறப்பான முறையில் தொடங்கியது.
கந்த சஷ்டி நிகழ்ச்சியை முன்னிட்டு வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் உள்ளிட்ட சுவாமிக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விசேஷ பூஜைகள் மற்றும் பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு, நாள்தோறும் சுவாமி திருவீதி விழா காட்சியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சியளித்தார்.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ஆறாம் நாளான நேற்று அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக உற்சவர் பாலசுப்பிரமணியசுவாமி கிடா வாகனத்தில் ஆலய மண்டபத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க ஆலயம் வலம் வர புறப்பட்டார்.
ஆலயத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக சுவாமி வலம் வந்து, வடக்கு வாசல், மேற்கு வாசல் ,தெற்கு வாசல் வழியாக ஆலய கிழக்கு வாசல் பாதையில் வலம் வந்து சூரபத்ம அசுரனை வேல் கொண்டு அழிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தத்ரூமான முறையில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திடீரென இந்நிகழ்ச்சியில் மழை பெய்ததால் கொட்டும் மழையிலும் பக்தர்கள் அரகர, அரகர கோஷத்துடன் குடை பிடித்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்த நிலையில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
மேலும் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்கார விழாவில் காண கரூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷங்களை எழுப்பியவாறு முருகப்பெருமானை மனம் உருகி தரிசனம் சென்றனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.