Sani Peyarchi 2023: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற பழமையான வதான்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை நாடி வருபவர்களுக்கு வேண்டிய வரத்தினை வாரி வழங்கும் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் நேற்று மாலை சனிப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து மாலை 5:20 மணிக்கு கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார். அதனை முன்னிட்டு காலை 10 மணி முதல் பரிகார ஹோமமும் மதியம் பூரணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடத்தப்பட்டது. சரியாக 5:20 மணிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்றி, அன்னதானம் செய்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம், விருச்சகம், மகரம், மீனம் ராசிகளை உடையவர்கள் பரிகாரம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை படித்துறை விசுவநாதர் கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மங்கள சனி பகவானுக்கு மகாபிஷேகம் செய்து தீபாரதனை. ஏராளமான பக்தர்கள் வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான படித்துறை விஸ்வநாதர் திருக்கோயிலில் மங்கள சனி பகவான் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு நளன் மகாராஜா சனி பகவானிடம் பிரார்த்தனை செய்து உடல் பிணி போக்கி கொண்டதாக வரலாறு கூறுகிறது.
இக்கோயிலில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு மங்கள சனி பகவானுக்கு பரிகார ஹோமங்கள், மகா பூர்ணாகுதி மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், பன்னீர், திரவியங்கள் கொண்டு மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.20 மணிக்கு சனீஸ்வரர் பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
நிம்மேலி சனீஸ்வரர் பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் மிகப் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சனீஸ்வர பகவான் தனக்கு ஏற்பட்ட குஷ்யோகம் என்ற நோய் நீங்க வேண்டி இத்தலத்தில் சிவனை பூஜித்து, திருக்கோயில் எதிரில் உள்ள திருக்குளத்தில் நீராடி நோய் நீங்கி நிம்மதியுற்ற காரணத்தினால் இத்தலம் நிம்மதியூர் என்று அழைக்கப்பட்டு காலத்தால் மருவி, தற்போது நிம்மேலி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவ்வாலயம் சனி பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இத்தலத்தில் சனீஸ்வரர் பகவான், தன்னை பூஜிக்கும், பக்தர்களையும், பரிகாரம் செய்விக்கும் பக்தர்களையும், பெயர்ச்சி காலங்களில் ஏற்படக்கூடிய சகல பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய கிரகாதிபதியாக அருள் பாலித்து வருகிறார்.
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு பரிகார ஹோமங்கள் தொடங்கி மதியம் பூர்ணாஷுதி தீபாரானையும், அதனைத் தொடர்ந்து மதியம் 3, மணி அளவில் மகா அபிஷேகம் நடைபெற்றது, பின்னர் மாலை 5:20 மணிக்கு, சனீஸ்வரர் பகவான்,மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு சஞ்சாரம் (பெயர்ச்சி) அடைந்தார். அப்பொழுது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பரிகார ராசிக்காரர்களான ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை, பரிகாரம் செய்து வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்தனர்.