Sabarimala Temple Opening: சுவாமியே சரணம் ஐயப்பா... சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி அறிவிப்பு
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தின்போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்து உள்ளது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
அப்படி தரிசனம் செய்வதற்காக நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சென்றாண்டு 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது தவிர ஒவ்வொரு தமிழ் மாத (மலையாள மாதத்தின்) பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜை நடைபெறும். மேலும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி திருவிழாவையொட்டியும் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள். மறுநாள் (16-ந் தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்து உள்ளது. ஆனால் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த சலுகை நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே பொருந்தும் என்றும் மாத பூஜை காலங்களில் இந்த சலுகை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.