காஞ்சி காமாட்சி அம்மன் அவதார திருநாள்: 1008 பால்குடம் அபிஷேகம், புஷ்பாஞ்சலி! பக்தர்களின் பரவசம்!
"காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது"

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், காமாட்சி அம்மன் அவதார திருநாளை முன்னிட்டு 1008 பால்குடம் அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி சேவை வெகு விமர்சியாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
காஞ்சி மாநகரம் நகரேஷூ காஞ்சி என்று போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம். அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று புராணங்களே சொல்லும் புராதனப் பெருமைகள் கொண்ட தேசம் காஞ்சியம்பதி. இங்கே, சிவாலயங்களில் அம்பாளுக்கு தனியே சந்நிதி இல்லை. மாறாக, உலகின் அத்தனை சக்தி பீடங்களுக்கும் தலைமைப் பீடமாகத் திகழ்கிறது காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம். எனவே இங்கு வேறு எந்தக் கோயிலிலும் அம்பாளுக்கு சந்நிதி இல்லை.
ஐப்பசி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்ததாக ஐதீகம் அதனை ஒட்டி இன்று காஞ்சிபுரம் சங்கரமடம் காமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 1008-க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி சங்கர மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.
காமாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகம்
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்றனர்.
பால்குடம் ஊடகத்தில் 20க்கும் மேற்பட்ட பம்பை குழுவினர் பம்பை வாசித்தபடி, பேண்ட் வாத்தியங்கள் உடன் 1008 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்ததை வழியெங்கும் பக்தர்கள் மெய்சிலிர்த்து.
இரவில் புஷ்பாஞ்சலி சேவை
இதனைத் தொடர்ந்து இரவு காமாட்சி அம்மன் வைர வைடூரிய மாலைகள் சாற்றப்பட்டு, வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு குளக்கரையில் உள்ள பூர மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது புஷ்பாஞ்சலி சேவை செய்யப்பட்டது. இதில் கூடை கூடையாக புஷ்பங்களைக் கொண்டு வந்து அம்பாளுக்குச் சார்த்தினார்கள்.
ரோஜாப்பூ, மல்லிப்பூ, மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, செண்பகப்பூ, பல வண்ண நிற பூக்களை வைத்து புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், நம் சந்ததியையெல்லாம் வாழச் செய்வாள் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை என்பதாலும் இன்று கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.




















