Purattasi Viratham: புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள் தெரியுமா..?
Purattasi Viratham in Tamil: பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்களால் ஏராளமான பலன்களை அடையலாம்.
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்நத மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்று. தமிழ் மாதங்களில் 6வது மாதமான புரட்டாசியில் சூரியன், கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார். புதன் விஷ்ணுவின் அம்சமாக பார்க்கப்படுகிறார். சைவப் பிரியரான புதன் பகவான் புரட்டாசி மாதத்தில் ஆட்சி செய்வதால், நாம் சைவம் சாப்பிடுவது சிறந்தது.
புரட்டாசி விரதம் :
புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதால் பெருமாளின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், புரட்டாசி மாதத்தில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளிக்க வேண்டும். நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நாமம் இட்டுக்கொள்ள வேண்டும்.
வீடு வாசல்களில் மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு புதியதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும். காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு வைநேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொறிகடலை மற்றும் சர்க்கரை கலந்து படைக்கலாம்.
வீட்டில் ஏற்கனவே சுத்தமாக கழுவி தயாராக வைத்திருக்கும் சொம்பை எடுத்து அதற்கு மூன்று நாமம் இடவும். அந்த சொம்பில் அரிசி, நாணயங்கள் இடவும்.
பெருமாளுக்கு படைத்தல் :
சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளில் இருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும். சமைத்த உணவுகளை குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். குழந்தைகள் கோவிந்தா, கோவிந்தா என்று நாமம் சொன்னால் கூடுதல் பலன் கிட்டும். இதனால், பெருமாள் வீட்டிற்குள் வருவதாக நம்பப்படுகிறது.
வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்க உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். இந்த விரதத்தை செய்வதன் மூலம் நல்ல பலன்களை அடைய முடியும்.