அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் திரவியம் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டுப் புடவை சாத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லத்தில் அமைந்துள்ள ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதை ஒட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி மற்றும் செடில்காவடிகள் எடுத்து வந்து அம்மனுக்குத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தஞ்சாவூர் பெருநகரம் உருவாவதற்கு முன்பே, வல்லம் பகுதிதான் முற்காலச் சோழர்களின் முதன்மைத் தலைநகரமாகவும், நிர்வாக மையமாகவும் திகழ்ந்தது. அந்த காலகட்டத்தில் சோழ மன்னர்களால் நிறுவப்பட்டு, வழிப்படப்பட்ட மிகத் தொன்மையான கோயிலே இந்த வல்லம் ஏகௌரியம்மன் கோயில் ஆகும்.

சோழ வம்சத்தினரின் வழிபடு தெய்வமாகவும், குலதெய்வமாகவும், போர்களில் தொடர் வெற்றிகளை வாரி வழங்கும் 'வல்லத்து காளி'யாகவும் ஏகௌரியம்மன் போற்றப்பட்டார். சோழ மன்னர்கள் ஆட்சி மற்றும் அரசு தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும், அல்லது எதிரிகளை வீழ்த்தப் போர்க்களம் புறப்படும் போதும், இந்த தேவியின் முன் நின்று அருள்வாக்கு கேட்டு, அம்மனின் உத்தரவைப் பெற்ற பின்னரே தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
அடர்ந்த காட்டுப் பகுதியில் அம்மன் முதன்முதலில் எழுந்தருளிய இடத்தில் அமைக்கப்பட்ட 'சுதை வடிவ' அம்மன் சிலை, கடந்த 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், பழமை மாறாமல் இன்றளவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது இக்கோயிலின் மிக முக்கிய அம்சமாகும்.
இத்தகைய வரலாற்றுப் பெருமைகளும் ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் கோலாகலமாக நடப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டின் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வல்லத்தில் திரண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, வல்லம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற வஜ்ஜிரதீர்த்த குளக்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
ஆன்மீகச் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல பக்தர்கள் அலகுகுத்தி பறவைக்காவடி, செடில்காவடி மற்றும் பல்வேறு விதமான காவடிகளை ஏந்தி, ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து ஏகௌரியம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், வல்லம் கடைவீதி மற்றும் பேருந்து நிலையப் பகுதிகள் முழுவதிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால், அப்பகுதியே விழாக்கோலம் பூண்டு ஆன்மீகப் பரவசத்தில் மூழ்கியது.
தஞ்சை வடபத்ர காளியம்மன் ஆலயம்
ஆடி மாதம் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தஞ்சை கீழவாசல் பகுதியில் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த வடபத்திர காளியம்மன் கோவில் உள்ளது. மராட்டிய மன்னர் காலத்தில் எழுப்பப்பட்ட இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரம் ஆகியவற்றை ஒட்டி கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர். அம்மன் வேடத்தில் வந்த பெண் பக்தை காளியை வழிபட்டு காவேரி மண்ணில் நெல் விளையும் விவசாயி கஷ்டம் எல்லாம் கரையும் மண் செழிக்க மழை தருவேன் மக்களோடு மனம் குளிர வளம் தருவேன் என குறி சொல்லி கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் வளையல் வழங்கினார்.
அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் திரவியம் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டுப் புடவை சாத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்






















