கண் திருஷ்டி பிரச்சினையா? - வீட்டில் எலுமிச்சை பழம் வைத்தால் போதும்!
வீட்டில் ஏதாவது எதிர்மறையான சம்பவங்கள் இருந்தால் உடனடியாக ஊர் கண் பட்டு விட்டது, திருஷ்டி பட்டு விட்டது என சொல்வோம். உடனடியாக சாஸ்திரத்தில் அதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை செய்வோம்.

பொதுவாக ஆன்மிகத்தில் அதிக நாட்டம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது.எந்த ஒரு விஷயத்தையும் நாள், நல்ல நேரம், திதி, சூலம் என அனைத்தும் பார்த்து தான் செய்வோம், தொடங்குவோம்.
இப்படியான நிலையில் வீட்டில் ஏதாவது எதிர்மறையான சம்பவங்கள் இருந்தால் உடனடியாக ஊர் கண் பட்டு விட்டது, திருஷ்டி பட்டு விட்டது என சொல்வோம். உடனடியாக சாஸ்திரத்தில் அதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை எவ்வளவு செலவு செய்தாவது நாம் முடிப்போம், அல்லது அப்படி செய்பவர்களைப் பார்த்திருப்போம். ஆனால் ஆன்மிக பொருளாக அறியப்படும் எலுமிச்சைப் பழம் ஒன்றே போதும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளையும், தீய எண்ணங்களையும் விரட்டும் என சொல்லப்படுகிறது.
பலரும் வீட்டின் பிரதான வாசல், தொழில் செய்யும் இடங்களின் முன்பகுதியில் எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வைத்திருப்பதைக் காணலாம். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் முன் பக்கத்தில் எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். இப்படி செய்வதால் வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் வெளியில் இருந்து உள்ளே நுழையும் எதிர்மறை ஆற்றல் தடுக்கப்படுவதாக ஐதீகம் உள்ளது.
இப்படியாக வாசலில் எலுமிச்சைப் பழத்தை வெட்டி செவ்வாய்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் வைக்கலாம். இது சிறந்த பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. அதேசமயம் இவற்றை வாரம் ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். எலுமிச்சைப் பழம் காயும் வரை வாசலில் இருக்கலாம். அவ்வாறு எலுமிச்சை வைக்கும் நாளில் நாம் இரண்டு விளக்குகளை பிரதான வாயிலில் வைத்து தூபம் காட்டி வழிபட வேண்டும். எலுமிச்சை பழம் வீட்டின் பூஜையறையில் இருப்பதால் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் யாவும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
இதற்கான எலுமிச்சை பழத்தை தேர்வு செய்யும்போது புள்ளிகள் அல்லது எவ்வித சேதமுமில்லாத பழத்தை வாங்க வேண்டும். குடும்ப பிரச்னை, நிலம் மற்றும் சொத்து தகராறு, இல்வாழ்க்கை பிரிவினை போன்ற எந்த விதமான எதிர்மறை பிரச்னைகள் என்றாலும் அதற்கு எலுமிச்சையை வெட்டி வீட்டின் பிரதான வாயிலில் வைத்து பரிகாரம் மேற்கொள்ளலாம். அதேபோல் உங்களால் முடிந்த ஒற்றைப்படை எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களைக் காட்டி வீட்டின் இருபுறமும் மாலையாக கட்டி தொங்க விடலாம்.
அதேசமயம் வீட்டின் பூஜையறையில் எலுமிச்சை தோலில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடலாம். இதனாலும் வீட்டின் எதிர்மறை எண்ணங்கள் அகலும் என நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)





















