திருவையாறில் தை அமாவாசையை ஒட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
தை அமாவாசையையொட்டி திருவையாறில் இன்று முன்னோருக்கு ஏராளமாோர் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
தஞ்சாவூர்: தை அமாவாசையையொட்டி திருவையாறில் இன்று முன்னோருக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகள் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரகனும் ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்கார்களான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பி வைக்கிறோம். பெரும்பாலும், சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஒருவர் தனது பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்க மறந்து, மற்ற தெய்வங்களை வணங்கி எவ்விதப் பலனுமில்லை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நமது முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகுந்த நற்பலனைத் தருவதாகும். மேலும், அமாவாசை தினத்தன்று எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து உபசரித்து அவர்களின் பசியைப் போக்கினால், கடவுளின் ஆசியோடு, முன்னோர்களின் ஆசியும் பூரணமாக நமக்குக் கிடைக்கும்.
தை அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளான கடல், ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுப்பது மிகுந்த நன்மை பயப்பதாகும். அப்படி நீர்நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சேர்ந்து விடலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசையில் ஆயிரக்கணக்கானோர் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று தை அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி ஐயாறப்பரை வழிபட்டு சென்றனர். இதனால் திருவையாறு காவிரி ஆறு புஷ்ய மண்டப படித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னதாக திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் மக்கள் தங்கள் முன்னோர் நினைவாக திதி கொடுத்தனர். தொடர்ந்து திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியில் சூலபாணிக்கு பலவகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் சாமி புறப்பட்டு திருவையாறின் 4 வீதிகள் வழியாக வந்து கோவிலில் அடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்து இருந்தனர்.