பழனியில் வள்ளிக்கு தாய் வீட்டு சீதனத்தை வழங்கிய குறவர் இன மக்கள்..!
தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 7ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனி முருகனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு சென்றனர். இதில் தேன், திணைமாவு, மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது.
சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது.
வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி, மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்