கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர்; கோலாகலமாக நடந்த ஆவணி மூலத்திருவிழா...!
நெல்லையப்பர் கோயில் முன்பாக சாபமிட்டு கோபித்துக் கொண்டு சென்ற கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டும் ஆவணி மூலத் திருநாள் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோச்சனம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. சோழர்களின் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர் கருவூர் சித்தர். இவரின் கடும் தவத்தினால் எட்டு வகை சித்திகள் கருவூர் சித்தருக்கு கிடைத்தது. சித்திகள் பெற்ற கருவூர் சித்தர் சிவ தல யாத்திரைகள் மேற்கொள்கிறார். ஈசனை அழைத்த உடன் அவர் காட்சி கொடுக்க வேண்டும் என்ற சித்தியும் பெற்றார்.
இந்த நிலையில் நெல்லை வந்த கருவூர் சித்தர் நெல்லையப்பரை அழைத்தார். குறிப்பாக 9ம் திருநாளில் இரவில் கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று ”நெல்லையப்பா”, ”நெல்லையப்பா” என்று அழைத்துள்ளார். ஆனால் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் பதில் அளிக்கவில்லை. சித்தாின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக நெல்லையப்பர் செவிசாய்க்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்தர், ஈசன் இங்கு இல்லை, எருக்கும், குறுக்கும் இங்கு எழுக என்று சாபமிட்டு மானூரை நோக்கி நடந்தார். நெல்லையை அடுத்த மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு வந்த சித்தரை சிவதொண்டராக வந்து நெல்லையப்பர் அழைத்தார். சற்று கோபம் தணிந்த சித்தர், மானூர் வந்து காட்சி தந்து சாபவிமோச்சனம் பெறலாம் என ஈசனிடம் கூறி நடந்தார். இதனையடுத்து நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் மானூர் சென்று சித்தருக்கு ஜோதிமயமாக காட்சி கொடுத்தனர். தொடர்ந்து கருவூர் சித்தரை உடன் நெல்லைக்கு அழைத்து வந்தனர். நெல்லை வந்ததும், இங்கு ஈசன் உள்ளார். எடுக்கும், குறுக்கும் அறுக என கூறி சாப விமோச்சனம் வழங்கினார்.
இந்த நிகழ்வால் மகிழ்ந்த சித்தர் எனக்கு காட்சி கொடுத்த ஆவணி மூலத்திருநாள் அன்று ஒவ்வொரு வருடமும் காட்சி தர இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அதன்படி, ஆவணி மூலத்திருநாளின் 10வது நாளான நேற்று இரவு கருவூர் சித்தரை அழைத்து வர சுவாமி சந்திரசேகரர் பவானி அம்பாள் பாண்டியராஜா சண்டிகேஸ்வரர் தாமிரபரணி அம்பாள் அகஸ்தியர் குங்கிலிய நாயனார் ஆகியோா் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூர் அம்பலத்திற்கு எழுந்தருளினர். மானூர் அம்பல தெருவில் சுவாமி நெல்லையப்பர் கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கோவில் அம்பலத்தில் அடிக்கு ஆயிரம் பொன் கொடுப்பதாக கூறி கருவூர் சித்தரை திருநெல்வேலிக்கு அழைக்கும் திருவிளையாடல் ஓதுவாமூர்த்திகளால் பாடப்பட்டது. நெல்லையப்பர் தரிசனம் பெற்ற கரூர் சித்தர் தன் சாபத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். இத்திருவிழாவில் பக்தா்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி, அம்பாள் மற்றும் கருவூர் சித்தர் தாிசனம் பெற்றனர்.