70 வயதிலும் கொலு வைத்து வழிபடும் மூதாட்டி.. கிராமத்தில் 52 ஆண்டுகளாக நடைபெறும் வழிபாடு
52ஆம் ஆண்டாக நவராத்திரியை முன்னிட்டு வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்யும் 70 வயது மூதாட்டி.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே 70 வயது மூதாட்டி 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபாடு மேற்கொண்டு வருவது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி
புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. துர்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு 9 நாள்கள் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். இது வடமாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழா இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை, அகால போதான், துர்கோட்சப் ஆகிய பெயர்களில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சஷ்டி தொடங்கி தசமி வரை இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசா, அசாம், பீகாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பொது இடங்களில் பந்தல் அமைத்து துர்கா தேவியை 9 நாட்களும் பூஜை செய்வார்கள்.
நவராத்திரி கொண்டாட்டம்
சிவபெருமானுக்கு உகந்த நாள் சிவராத்திரி. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்தது நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி விரதம் இருந்து வழிபடுவதால் நவராத்திரி விழா எனப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளிலேயே இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவார்கள்.
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் முறையை துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. விஜய தசமியுடன் நவராத்திரி விழா நிறைவு பெறும். இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது ஐதீகம்.
மூதாட்டியின் 52 ஆண்டு நம்பிக்கை
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட திருக்கச்சூர் பகுதியில் வசித்து வருபவர் காந்திமதி வயது 70 இவர் சிறுவயதிலிருந்தே இறை நம்பிக்கை மீது தீராத பற்று கொண்டுள்ளார். அதன்படி அவரது இல்லத்தில் 9 படிக்கட்டுகள் அமைத்து 52 ஆவது ஆண்டாக கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்.
அங்கு கொலுவை பார்வையிட வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்தும் அதே போல் குழந்தைகளுக்கு நோட்டு பேனா புத்தகங்கள் ஆகியவற்றை வழங்க வருகிறார். இந்த கொலுவில் பிரத்தியேகமாக சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டும் காட்சி, கைலாய மலை ஆறுபடை முருகன் வீடு உள்ளிட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது இங்கு மாலை நேரத்தில் ஏராளமானோர் வருகை புரிந்து கொலுவை ரசித்து செல்கின்றனர். குறிப்பாக நவராத்திரி விழா மற்றும் நவராத்திரி கொலு பொம்மை வைத்து வழிபடுவது, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்கள் பெருமளவில் ஈடுபடுவதில்லை, ஆனால் மூதாட்டி ஏழ்மையிலும் கொலு பொம்மை வைத்து வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டு காலம் மேலாக மூதாட்டி கொலு வைத்து வழிபட்டு வருவது பகுதி கிராம மக்களுடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. மூதாட்டியின் இந்த செயலை கிராம மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து 9 நாட்களும் மூதாட்டி விரதம் இருந்து, கொலு வைத்து வழிபாடு செய்து வருவதால், கிராமம் முழுவதும் அறிந்த முகமாக, மூதாட்டி மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.