”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்
பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை, அந்த ஃபோட்டோவை எடிட் செய்ததே நான் தான் என சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர். அவர் பிரபாகரனைச் சந்தித்து பல விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக பல முறை பொதுக்கூட்டத்திலும், பேட்டியிலும் கூறியுள்ளார்.
மேலும், அவர் பிரபாகரனைச் சந்தித்ததற்கான ஆதாரமாக பிரபாகரனுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது. பிரபாகரனை அவர் சந்தித்தது சில நிமிடங்கள் மட்டுமே என்றும், பிரபாகரன் இவரிடம் ஏதும் பெரியதாக ஆலோசிக்கவில்லை என்றும் சில அரசியல் தலைவர்கள் சீமானை விமர்சிப்பது உண்டு. இந்த நிலையில், சீமான் - பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும், அது எடிட் செய்யப்பட்டது என்றும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஷாக் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பான அவரது பதிவில், ‘இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” என கூறியுள்ளார். மேலும் பேட்டிகளில் இதுதொடர்பாக பேசிய அவர், ‘தொலைக்காட்சியில் பணியாற்றியபோது செங்கோட்டையன் என்பவர் பணியாற்றினார். அவர் சீமானுக்கு நெருக்கமானவர். அப்போது, தலைவர் பிரபாகரன் மகேந்திரனுடன் இருப்பது போன்ற பல படங்களை டிவிடியில் எடுத்துக்கொண்டு வந்தார். சீமான் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு வந்து இரண்டையும் பக்கத்தில், பக்கத்தில் வைத்து தருமாறு என்னிடம் கேட்டார். நான் எதற்கு? என்று கேட்டபோது சர்ப்ரைசாக கொடுப்பதற்காக வேண்டும் என்றார்.
ஆனால், இப்போது அந்த புகைப்படத்தைப் பார்த்தால் நிறைய குறைகள் தெரியும். அவருடைய தலைக்குப் பின்னால் நிழல் இருக்கும். சீமான் அண்ணன் கைக்குப் பின்னால் நிழல் இருக்காது. பிரபாகரன் படத்திற்கு பின்னால் அந்த நிழல் இருக்காது. அந்தளவு தெளிவாக பண்ணவில்லை. ஃப்ரேம் போட்டு மாட்டுவதற்காகத்தானே என்று பெரியதாக பண்ணவில்லை. அது பிற்காலத்தில் அவர் நேரில் சந்தித்ததாக உலா வரும்போது, நான் செங்கோட்டையனிடம் நேரில் கேட்டேன். நம்மளால ஒரு அரசியல் தலைவரை உருவாக்கியிருக்கோம். அவர் வளர்ந்து வந்தால் நமக்கு நல்லது தானே என்றார். அப்போது எனக்கு நான் கொடுத்த புகைப்படம் நல்ல விஷயத்திற்கு பயன்படுகிறது என்று நினைத்துக் கொள்வேன். சீமான் - பிரபாகரன் பக்கத்தில் இருக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது. இதுதவிர, அவர்கள் சந்திப்பின்போது வேறு புகைப்படம் எடுத்தார்களா? சந்தித்தார்களா? என்பது குறித்து நான் ஆதாரப்பூர்வமாக ஏதும் உறுதியாக சொல்ல இயலாது. இந்த புகைப்படம் மட்டும் உண்மையாக எடுக்கப்பட்டது இல்லை. இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவர் சொல்லும் பல தகவல்கள் உண்மைக்கு முரணாக உள்ளது” என விமர்சித்துள்ளார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பதிவில் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் 2009 லேயே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து வரைந்திருப்பான் போல அந்த டுபாக்கூர் பெரியாரிஸ்ட் சங்ககிரி ராஜ்குமார் ! மொத்தம் ஏழு புகைப்படங்கள் இருக்கு எதுடா நீ வரைந்தது? என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.





















