TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று பரந்தூரில் தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் புதுமுகமாக அறிமுகமாகி இருப்பவர் நடிகர் விஜய். அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ள ஒருவராக விஜய் கணிக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஒரு வருடம் நெருங்க உள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு நேற்று விஜய் பரந்தூர் விமான எதிர்ப்புக்குழுவினரை நேரில் சந்தித்தார்.
தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் பேச்சு:
பரந்தூரில் விஜய் பேசிய பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் தனது முதல் அரசியல் மாநாட்டிலும், நேற்று பரந்தூரிலும் மட்டுமே அரசியல் பேசியுள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவர் தனது அரசியல் எதிரி யார்? என்பதை தீர்மானித்துள்ளார். ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் விஜய் அரசியல் எதிரியாக ஆளுங்கட்சி தி.மு.க.வையும், கொள்கை எதிரியாக பா.ஜ.க.வையும் தீர்மானித்து செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க, பா.ஜ.க.தான் டார்கெட்:
தன்னுடைய அரசியல் மாநாட்டிலும் தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் விமர்சித்து பேசிய விஜய், நேற்று பரந்தூரிலும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை மட்டுமே விமர்சித்துப் பேசினார். விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணங்கள் தி.மு.க.வின் கூட்டணியை உடைப்பதும், தி.மு.க. கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுப்பதுமே ஆகும்.
மேலும், யாருடன் போட்டி போடுகிறோம் என்பதில் மிகத்தெளிவாக விஜய் காய் நகர்த்தி வருகிறார். வேறு அரசியல் கட்சிகளையோ, வேறு அரசியல் தலைவர்களையோ விமர்சித்தால் தி.மு.க.வுடனான தனது மோதல் திசை மாறிவிடும் என்று விஜய் கருதுகிறார். இதன் காரணமாகவும், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வையும், மாநிலத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வையும் விஜய் எதிர்க்கிறார்.
மற்ற கட்சிகளை விமர்சிக்காதது ஏன்?
விஜய்யின் நேற்றைய பேச்சில் நேரடியாக தி.மு.க.வைத் தாக்கி விஜய் பேசினார். மற்ற கட்சியினரை விஜய் எதிர்க்காததற்கு காரணம், விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பிற கட்சியிலும் விஜய்யின் ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவும் தனக்குத் தேவை என்பதால் அந்த கட்சியினரை விஜய் விமர்சிக்காமல் தவிர்த்து வருகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ள விஜய், இனி வரும் நாட்களில் அரசியல் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல கருத்துக்களை பொதுவெளியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவர் ஒருமுறை கூட நேரடியாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்கவில்லை. நிருபர்கள் மட்டுமின்றி மக்களின் கேள்விகளுக்கும் அவர் எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

