Navratri Golu Dolls: 35 வடிவிலான கொலு பொம்மைகள்...விழுப்புரத்தில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
விழுப்புரத்தில் நவாரத்தி விழாவிற்கு 35 வடிவிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை ஆகும். நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி அக்டோபர் 24-ந் தேதி நிறைவடைகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்கை, சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி தேவிகள் ஒன்றாக சேர்ந்து வதம் செய்ததே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
கொலு வழிபாடு:
9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது கொலு வழிபாடு. நவராத்திரி பண்டிகையை கொண்டாடும் விதமாக வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. வண்ண அலங்கார பொம்மைகளை அடுக்கி வழிபடுவதே இந்த கொலு கொண்டாட்டம் ஆகும். கொலு பண்டிகைக்கு 3, 5, 7, 9 என ஒற்றைப் படையில் படிகள் அமைக்க வேண்டும். இதில், எந்த படியில் என்னென்ன வைக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு உயிர்களின் பொம்மையை வைக்க வேண்டும்.
விதவிதமான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து 10-வது நாளான தசமி அன்று 'விஜயதசமி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அம்பிகையை வழிபடுவதற்கு பல விழாக்கள் இருந்தாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை அம்பிகையை மூன்று வடிவங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபடக்கூடிய விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான நவராத்திரி விழா வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குவதால் அன்றைய தினம் வீடுகள், ஆலயங்கள் தோறும் கொலு வைத்து மக்கள் வழிபாடுகளை செய்வது வழக்கம்.
நவராத்திரி விழா கொண்டாடத்தின் போது 9 நாட்களுக்கு 9 படிகளில் பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகள், சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்வது நவராத்திரியின் அங்கமாக உள்ளது. இதனால் நவராத்திரி விழா தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள கரடிபாக்கம் கிராமத்தில் 35 வடிவங்களிலான கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு அடி முதல் 3 அடி உயரத்திலான கொலு பொம்மைகள் இயற்கையை பாதிக்காத வண்ணம் காகித கூழ், மரவள்ளி கிழங்கு கூழ், வண்டல் மண் கொண்டு செய்யப்படுவதால் கேரளா, பெங்களூர், மதுரை, கோவை, சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த பொம்மைக்கு அதிக வரவேற்பு உள்ளதால் அதிக அளவு ஆர்டர்கள் வந்துள்ளதாக கொலு தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொலு பொம்மைகள் தயாரிக்க வாங்ககூடிய காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவைகளின் விலை உயர்ந்துள்ளதால் ஏரிகளிலிருந்து பொம்மை தயாரிப்பாளர்களுக்கு வண்டல் மண் எடுக்க அரசு உதவி புரிய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரத்தில் செய்யப்படும் கொலு பொம்மைகள் 300 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கொரொனோ வந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு இத்தொழில் மீண்டுள்ளதாக கூறுகின்றனர்.
பொம்மை உற்பத்தி செய்முறை:
முதலில் கொலு பொம்மை செய்வதற்கான கலவை தயாரிக்கப்படுகிறது. பசை மாவு, கிழங்கு மாவு, மைதா மாவு முகத்தில் பூசும் பவுடர், சிமெண்ட் பேப்பர் சேர்த்து கலவை தயாரிக்கப்பட்டு அந்த கலவையிலிருந்து பொம்மை செய்யப்படுகிறது. ஒரு காகிதக்கூழ் பொம்மை செய்வதற்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகிறது. 5 நபர்கள் கொண்ட குழுவாக பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்துள்ளன.
கொலுபொம்மைகள் வாங்க விரும்புவோர் 9585858470 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுக்கலாம் என குமார் தெரிவித்தார்.