Karthigai Amavasya: கார்த்திகை அமாவாசை.. இந்த 5 விஷயங்களை செய்ய மறக்காதீங்க!
ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் நாம் முன்னோர் வழிபாடு மேற்கொண்டு விரதம் இருந்து வணங்கினால் பல நன்மைகள் கிடைப்பதாக சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் ஒவ்வொரு திதியும் குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அமாவாசை முன்னோர்களை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் நாம் முன்னோர் வழிபாடு மேற்கொண்டு விரதம் இருந்து வணங்கினால் பல நன்மைகள் கிடைப்பதாக சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கார்த்திகை மாத அமாவாசையானது நவம்பர் 19ம் தேதி வருகிறது. அன்றைய நாளில் காலை 10.28 மணிக்கு தான் அமாவாசை தொடங்குகிறது. இந்த திதியானது நவம்பர் 20ம் தேதி மதியம் 12.31 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம். இதனை நாம் செய்வதால் செல்வ செழிப்பு, பண வரவு, கடன் பிரச்னை தீருதல் போன்ற விஷயங்கள் நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
அமாவாசை நாளில் நம் வீட்டின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு நீர்நிலைகளில் நீராட வேண்டும். திதி தாமதமாக தொடங்கும் நிலையில் முன்னோர் திதி, தர்ப்பணம் போன்றவைகளை வியாழக்கிழமை (நவம்பர் 20) காலையில் செய்யலாம். ஒருவேளை நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் கங்கை தீர்த்தத்தை வாங்கி குளிக்கும் நீரில் கலந்து நீராடலாம். அப்போது நம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானுக்கு தண்ணீர் படைத்து வழிபடலாம்.
அடுத்ததாக கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி வழிபடுவது என்பது இருக்கும். தீப சொரூபமாக நாம் இறைவனை வழிபடுவோம். அப்படியான நிலையில் அமாவாசை நாளில் மாலையில் சூரியன் மறைவுக்குப் பின் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். வீட்டின் மெயின் வாசல் அல்லது துளசி செடியின் அருகில் ஏற்றினால் நல்லது. இது பெருமாளின் ஆசீர்வாதம் கிடைக்க உதவுவதோடு, சனி பகவானால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கவும் செய்யும்.
தொடர்ந்து கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமாவாரம் அன்று அரச மரத்தை வழிபட்டால் பல்வேறு புண்ணியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் அமாவாசை நாளில் அரச மர வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதன் அடியில் கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு இரண்டு விளக்குகளில் தீபமேற்றுங்கள். ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே என்ற மந்திரத்தை உச்சரியுங்கள். பின்னர் அரச மரத்தை சுற்றி வந்தால் பித்ரு தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது.
கார்த்திகை அமாவாசை புதன் கிழமை வருவதால் அன்றைய நாளில் மாலை பெருமாளை வழிபட வேண்டும். இதனால் செல்வ வளம், வெற்றி, சுப காரிய தடை ஆகியவை நீங்கும். வீட்டில் வழிபடும்போது துளசி இலை, பஞ்சாமிர்தம் வைத்து நைவேத்யம் செய்யலாம்.
இன்றைய நாளில் மாலை நேரத்தில் மாவிளக்கு ஏற்றி வழிபடலாம். அதில் நல்லெண்ணெய், பசுநெய் ஊற்றி மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபட்டால் செல்வம் பெருகும். இன்றைய நாளில் குலதெய்வ வழிபாடும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக நம்பப்படுகிறது.





















