மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடக்கம்
பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம் விழா முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
மயிலாடுதுறையில் மயில் உருவில் சிவனை பூஜித்த ஆலயமான மாயூரநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக பூஜைகள் கோலாகலத்துடன் தொடங்கியதை அடுத்து, கண்கவர் மின்னொளியில் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு, 123 யாக குண்டங்களில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, பூரணாகுதி, சோடச தீபாரதனை, மகாதீபாரதனை உள்ளிட்டவைகள் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறும் இந்த ஆலயம், சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 123 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் மயிலாடுதுறைக்கு கொண்டுவரப்பட்டு ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்தது.
புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் ஆவாகனம் செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து வந்து யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து 123 யாக குண்டங்களில் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் பட்டு வஸ்த்திர ஹோமம், பூரணாகுதி, 16 வகையான சோடச தீபாரதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பௌர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம்.. காஞ்சி தும்பவனத்து அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..
ஓதுவார்களின் 82 மணிநேர அகண்ட பாராயணம், பன்னிருதிருமுறை, திருமுறை பண்ணிசை நடைபெற்றது. ஆகம சிவநெறி சிந்தனை சொற்பொழிவுகள், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் சிறப்பு இசை மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து எட்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேகமானது வருகின்ற செப்டம்பர் 3 -ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.