Car Festival : ஆன்மீகம்: வைத்தீஸ்வரன் கோயில் தேர் திருவிழா - தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் தை மாத உத்ஸவத்தை முன்னிட்டு செல்வமுத்துக்குமார சுவாமி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் முருகபெருமான், வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். சித்த மருத்துவ தலைவரான தன்வந்திரி சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு ஆண்டு தோறும் தை மாத உத்ஸவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த முப்பதாம் தேதி கொடியேற்றத்துடன் விழாவானது துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் செல்வமுத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம், காமதேனு வாகனம் என நாள்தோறும் வீதிஉலா தரிசனமும் நடைபெற்றது.தை மாத உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது, தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினார், தேரோட்டத்தை வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலின் நான்கு வீதிகளை தேரில் வலம் வந்த, முத்துகுமாரசுவாமிக்கு வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து ஆராதனை நடைபெற்றது, வழி நெடுகிலும் பொதுமக்கள் பக்தி பரவசத்தில் வழிபாடு செய்தனர். இறுதியாக திருத்தேரானது நிலைமை அடைந்து.