திருநாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷண விழா; திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் திருநாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, இன்று மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 17 -ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து இன்று 7-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 11.15 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, கோயிலை சுற்றி வலம் வந்தது கோபுர கலசங்களை அடைந்தது.
தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பெருமாள், தாயார், கருடன் சன்னதி விமானங்களுக்கு பூஜித்த புனித நீரைக் கொண்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தி வைத்தனர். இதனை அடுத்து மூலவர் மூர்த்திகளுக்கு சம்ப்ரோக்ஷணம் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத் அடுத்து தளிகை அமுது படையில், வேத மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம், சாற்று முறை நடைபெற்றன. மகா சம்ரோக்ஷண விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தார்கள் செய்து இருந்தனர்.
ஆலயத்தின் சிறப்பு:
இந்த ஆல்பமானது 108 வைணவ திவ்ய தேசங்களில், 36 -வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திவ்ய தேசங்களில் இத்தலத்துக்கு மட்டுமே அம்பலம் என்ற சொல் வழங்கப்படுகிறது. திருநாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலம், திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களில் (பெரிய திருமொழி) மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இரண்யாட்சன் என்ற அசுரன், பூமியை பாதாள உலகத்தில் மறைத்து வைத்தான். இதைக் கண்டு அஞ்சிய தேவர்கள், முனிவர்கள், இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டனர். திருமால் , பூமியை காப்பாற்றுவதற்காக, வராக அவதாரம் எடுக்க உள்ளதாக அவர்களிடம் கூறினார்.
இதைக் கேட்ட மகாலட்சுமியும் ஆதிசேஷனும், வராக அவதார காலத்தில் திருமாலை விட்டு எவ்விதம் பிரிந்து இருப்பது என்று கவலை கொண்டனர். திருமால் இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் பலாசவனம் சென்று அங்கு தவம் இருக்கவும். அங்கு சிவபெருமானும் வருவார். நான் அந்த சமயம் இரண்யாட்சனை வதம் செய்துவிட்டு அங்கு வருகிறேன். அப்போது அந்த இடம் ‘திருத்தெற்றியம்பலம்’ என்று அழைக்கப்படும். பாஷ்யகாரர் என்ற வைணவ பக்தர், தீட்சை பெற்ற 108 வைணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய உள்ளார். நான் அங்கேயே தங்கி நித்திய வாவாசம் செய்யவுள்ளேன்” என்றார்.
அதன்படி வராக அவதாரம் எடுத்த திருமால், பாதாள உலகுக்குச் சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார். இதையறிந்த ஆதிசேஷனும், மகாலட்சுமியும் இத்தலம் வந்து தவம் இயற்றத் தொடங்கினர். முன்னர் கூறியபடி இத்தலத்துக்கு வந்த திருமால், ஆதிசேஷன், சிவபெருமான், மகாலட்சுமி மூவருக்கும் அருள்பாலித்தார். போர் புரிந்த களைப்பில் சிவந்த கண்களுடன் இருந்த திருமால், அவ்வண்ணமே இத்தலத்தில் பள்ளி கொண்டார். அதனால் இத்தல பெருமாள் ‘செங்கண்மால் ரங்கநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில் இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கியதற்குச் சமம்.
கோயில் அமைப்பு
வேத விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில் கிழக்கு பார்த்து ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட கோலத்தில் மூலவர் அருள்பாலிக்கிறார். தலையையும், வலது கையையும் மரக்கால் மேல் கைத்துக் கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து, தொங்கவிட்டபடி காட்சி அளிக்கிறார். மூலவரின் தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் அமர்ந்துள்ளனர். உடன் லட்சுமி நாராயணர், சக்கரத்தாழ்வார், சந்தானகோபால கிருஷ்ணர் அருள்பாலிக்கின்றனர். செங்கமலவல்லி தாயார் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார், மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன் அருள்பாலிக்கின்றனர். மணவாள மாமுனிகள் இத்தலம் வந்து தரிசித்துள்ளார்.
சாப விமோசனம் பெற்ற சூரியன்
ஒருசமயம், ஒரு சாபத்தால் சூரியனின் பிரகாசமும் வலிமையும் குறையத் தொடங்கியது. தனது பிரகாசத்தையும் வலிமையையும் மீட்பது தொடர்பாக மிகவும் கவலை கொண்ட சூரியன், ஓர் அசரீரி வாயிலாக, திருத்தெற்றியம்பலம் பற்றியும் இங்குள்ள புஷ்கரிணி பற்றியும் அறிந்து கொண்டார். உடனே இத்தலத்துக்கு வந்து புஷ்கரிணியில் நீராடி சுவாமி தரிசனம் செய்து, சாபம் நீங்கப் பெற்றார். பழையபடி அவரது பிரகாசமும், வலிமையும் கிடைத்தன. சூரியன் நீராடிய புஷ்கரிணி, சூரிய புஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது. இவரைப் போலவே ஆனந்தாழ்வார் என்ற பக்தரும், இத்தலத்துக்கு வந்து சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது. செல்வாக்கு குறைந்தவர்கள், உயர் பதவி பெற விரும்புபவர்கள், புகழ், பெருமையை தலைமுறை தலைமுறையாகக் காக்க விரும்புபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து ஒருநாள் தங்கியிருந்து வழிபாடு செய்து, அனைத்து பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம். இங்கு வைகுண்ட ஏகாதசி, தை மாத கருடசேவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.