பொறையாறு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 23-ம் ஆண்டு தேர்பவனி விழா
தரங்கம்பாடி அருகே பொறையாறு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 23-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த பொறையாறு ராஜம்பாள் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் தேவாலயம். இவ்வாலயத்தின் 23 -ஆம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னதாக, அலங்கார குதிரை, ஒட்டகம், மாடு, சென்டைமேளம் முழங்க ஆலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை, தென்னங்கன்றுகள், முளைப்பாரி எடுத்தும் சாமியை பல்லக்கில் ஊர்வலமாக பெண்கள் தோளில் தூக்கிக் கொண்டும் கொடி ஊர்வலம் புறப்பட்டது.
அப்போது சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம் சென்றது. அதனை தொடர்ந்து மிக்கல் ஆண்டவர், தேவமாதா குழந்தை ஏசு, செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சுருவங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விமர்சையாக ஊர்வலம் சென்றது.
ராஜம்பாள் தெரு, மெய்தீன் மரைக்காயர் தெரு, வேப்பமரத்தெரு, காளியம்மன் கோயில் தெரு, பார்வதி அம்மன் கோயில் தெரு வழியாக ஊர்வலம் சென்று ஆலயத்தை அடைந்தது. பின் ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.