நாஞ்சில் நாடு முத்தாட்சி அம்மன் கோயில் ஐதீக திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறையில் அடுத்த நாஞ்சில்நாடு ஸ்ரீமுத்தாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஏந்தி நடன நிகழ்வுகளுடன் ஐதீக திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ இராமர் பிறந்த அயோத்தி மாநகரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த பட்டாரியர்கள் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி, அங்கிருந்து மயிலாடுதுறை பகுதியில் குடியேறியதாக புராண வரலாறு. அதை நினைவு படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு நாஞ்சில்நாடு என்று பெயரிட்டு வசித்து வருகின்றனர். மேலும், தங்களின் குலதெய்வமான முத்தாட்சியம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
ஸ்ரீ செல்வவிநாயகர், பாலசுப்ரமணியர், வண்டுகாமலையன், வண்டுகாமலை, பைரவர், முப்பிடாரி புடைசூழ நாயகர் வடிவில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன தந்துஆட்டுவித்து மகிழ்ந்து அருள்புரியும் ஸ்ரீமுத்தாட்சி அம்மன் தீச்சட்டி ஐதீக திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீச்சட்டி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
விழாவில் முக்கிய நிகழ்வான தீச்சட்டி திருவிழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. ஆலய நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட மூவரில் இருவர் தீச்சட்டிகளை கையில் ஏந்தியும், ஒருவர் பைரவருக்கான திரீசுலம் ஏந்தி நடனமாடியவாறு ஸ்ரீ முத்தாட்சியம்மன் வீதியுலா நடைபெற்றது. தீச்சட்டி ஏந்தியவர்களை அம்மனாக வழிபட்டு வீட்டுவாசலில் குத்துவிளக்கு ஏற்றி பழவகைகளை வைத்து வீட்டிற்குள் அழைத்து வரவேற்பளித்து மாலை அணிவித்து வணங்கினர்.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் இசை வாத்தியங்களை இசைக்க, தீச்சட்டியை ஏந்தியவாறு நடன நிகழ்வுகளுடன் முத்தாட்சியம்மன் வீதியுலா விடிய விடிய நடைபெற்றது. கண்கவர் வாணவேடிக்கை நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்ற திருவிழாவில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
Suryakumar Yadav : 26 நாட்களில் நான்காவது முறை கோல்டன் டக்… தொடரும் சூர்யகுமார் யாதவின் Bad Days..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்