Amit Shah: ’பிரதமர் மோடியை எவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார்களோ அந்த அளவுக்கு பாஜக வளரும்’ - அமித்ஷா பேச்சு
2024-ல் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திப்ருகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்
அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 12ல் பாஜக வெற்றி பெறும் என்றும், 2024ல் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திப்ருகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
சீன எல்லைக்கு அருகாமையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிபித்தூவில் பயணம் முடித்த பிறகு, அமித்ஷா திப்ருகாரை அடைந்து அஸ்ஸாம் பிராந்திய பாஜக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார், இது அப்பகுதியில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அடித்தளமாக இருக்கும் என அவர் கூறினார்.
அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வருவார் என குறிப்பிட்ட அவர் “காங்கிரஸ் கட்சியினரே கவனமாக கேளுங்கள் 2024ல், லோக்சபா தேர்தல் நடக்கும். மொத்தமுள்ள 14 இடங்களில் பாஜக 12-ல் வெற்றி பெரும், நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் “போடோலாந்து, கர்பி பகுதி இன்று அமைதியாக இருக்கிறது. அஸ்ஸாம் அனைத்து அண்டை மாநிலங்களுடனும் தனது எல்லைப் பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறது. மோடியின் நல்லாட்சியால் தான் இன்று அசாமில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் இப்போது பிஹுவின் பாடல்கள் மற்றும் நடனத்துடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது," என கூறியுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி கவுகாத்தியில் மோடி முன்னிலையில் 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை குறிப்பிட்டுள்ளார்
மேலும் “சமீபத்தில், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த அனைத்து மாநிலங்களிலும் பாஜக, ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. திரிபுராவில் இரண்டாவது முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் 13 எம்எல்ஏக்களுடன் மீண்டும் துணை முதல்வருடன் ஆட்சியில் அங்கம் வகிக்கிறோம். மேலும் மேகாலயாவிலும் அதே சூழல் நிலவுகிறது. இன்று, அஸ்ஸாம் மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிப் பயணம் 8 மாநிலங்களிலும் இடம்பிடித்துள்ளது” என அமித்ஷா கூறியுள்ளார்.
காங்கிரஸை விமர்சித்து பேசிய அமித்ஷா, “வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட காலம் இருந்தது. இந்த மாநிலங்களில் தேர்தல் வரும்போது ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவை மேற்கொண்டார், இருப்பினும் காங்கிரஸால் எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இது ராகுல் பாபாவிற்கு (ராகுல் காந்தியை ராகுல் பாபா என அழைத்த அமித்ஷா) புரியவில்லை. வெளிநாடு சென்று இந்தியாவைக் கேவலப்படுத்துகிறார். எந்த தேசபக்தருக்காவது அந்நிய மண்ணில் நாட்டைக் கேவலப்படுத்த எண்ணம் வருமா? ராகுல் பாபா, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் இந்த பாதையில் தொடர்ந்தால், வடகிழக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலை தொடரும். எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் மோடியை மோசமாக விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பா.ஜ.க வளரும்” என குறிப்பிட்டுள்ளார்.