(Source: ECI/ABP News/ABP Majha)
கூறைநாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிளக்கு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 23-ஆம் ஆண்டு ஆடி மாத 108 திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 23 -ஆம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நேற்றிரவு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் 108 திருவிளக்குகளை ஏற்றி வைத்து பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வந்த குத்துவிளக்குக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் மலர் கொண்டு சிறப்பு பூஜைகளை செய்தனர். அப்போது கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, திருவிளக்குக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில், அப்பகுதி சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்