48 ஆண்டுக்கு பிறகு மீண்டும்... தடையின்றி நடைபெற்ற தீமிதி திருவிழா - எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அடுத்த கஞ்சாநகரம் படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ஆடி திருவிழாக்கள்
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோவில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் கடந்த சில நாட்களாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
சிம்மத்தில் புதன் வக்கிரம்.. 12 ராசிக்கும் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
நிறுத்தப்பட்ட கஞ்சாநகரம் படைவெட்டி மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கஞ்சாநகரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழைமை வாய்ந்த ஶ்ரீ படைவெட்டி மாரியம்மன் திருக்கோயில். ஆண்டுதோறும் நடைபெற்று வந்த கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த 48 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையால் அன்றுமுதல் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது.
EPS: ”இதுதான் உண்மை”...திமுக போராட்டம் நடத்தியது இதுக்குத்தான் - இ.பி.எஸ்
48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்
இந்நிலையில் மீண்டும் கோயில் திருவிழாவை நடத்த வேண்டும் என முடிவெடுத்த அக்கிராமமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி, இனி வரும் காலங்களில் பிரச்சனையில்லாமல் கோயில் திருவிழாவை நடத்த தீர்மானம் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோயில் கும்பாபிஷேகம் விழாவினை செய்ய முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க திருப்பணிகளை தொடங்கினர். தொடர்ந்து அனைத்து திருப்பணிகளையும் முடித்து கடந்த ஜூன் 2-ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழாவானது நடைபெற்றது.
தடையின்றி நடைபெற்ற தடைப்பட்ட ஆண்டுத் திருவிழா
அதனைத் தொடர்ந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் கிராமமக்கள் ஒத்துழைப்புடன்’ ஶ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழாவான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜுலை 17-ம் தேதி விழாவானது காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனை அடுத்து ஓவ்வவொரு நாளும் கரகாட்டம், காளியாட்டங்களுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
பரவசத்தில் பக்தர்கள்
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. மேலதாள மங்கள வாத்தியங்கள் முழங்க விரதமிருந்து காப்பு கட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி கரகம் முன்னே செல்ல அதன்பின்னர் ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து ஆலயத்தின் முன்னே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் அலகுவாடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும் ஏராளமானோர் தீமிதித்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு தீபமிட்டு தீமிதி திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர்.