மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து மரியாதை!
பல்வேறு ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்கு பங்கேற்பதற்காக பாதயாத்திரை செல்லும் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு, மயிலாடுதுறையில் முஸ்லிம் ஜமாத்தார்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்து வரவேற்பு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்துக்கு சொந்தமாக திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில், பேரளம், திருக்குவளை உள்ளிட்ட 27 இடங்களில் தேவஸ்தானங்கள் உள்ளன. இவற்றின் கும்பாபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற 27ஆம் தேதி பேரளம் ஸ்ரீ பவானி அம்மை உடனாகிய சுயம்பு நாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ஒன்றாம் தேதி ஸ்ரீ ஞானபிரக தேசிக சுவாமிகள் குருமூர்த்த நூதன ஆலய மகா கும்பாபிஷேகம், மூன்றாம் தேதி கிடாரம் கொண்டான் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம், 12 -ஆம் தேதி திருக்குவளை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இவற்றில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் தருமபுரம் ஆதீன மடாதிபதி பாதயாத்திரையை துவங்கினார். ஒட்டகம், குதிரை ஆகியவை முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு வீடுகள் தோறும் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, மயிலாடுதுறை தைக்கால் தெரு பள்ளிவாசல் சார்பாக ஜமாத்தார்கள் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் அஜீஸ் தலைமையில் இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்கள், அவர்களுக்கு ஆதீனம் சார்பில் மடாதிபதி பொன்னாடை போர்த்தி பதில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாதயாத்திரை நிறைவு செய்து அடுத்த மாதம் 24 -ஆம் தேதி மயிலாடுதுறை மடத்திற்கு மீண்டும் தருமபுரம் ஆதீனம் திரும்புகிறார்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற முகாமில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தமிழக அரசின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டுகளுக்கு 12 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா நாற்பது லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றியம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கிராம ஊராட்சிகள் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை வசதி, இடுகாடு வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், குளங்களுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திட்ட அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர், வட்டார வளர்ச்சிப் பணிகள் ஆணையர், சுகாதாரத்துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, கால்நடை துறை உள்ளிட்ட 16 துறை அலுவலர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடி பணிகளை தேர்வு செய்வது வழக்கம்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரக்கீரங்குடி ஊராட்சியில் இது தொடர்பாக முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர், வேளாண் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு வசதி, இடுகாட்டு வசதி ஏற்படுத்திதர வேண்டி ஏராளமானோர் கிராம மக்கள் மனுக்களை அளித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.