ஒரே நாளில் இத்தனை கோயிலில் தீமிதி திருவிழாவா...? பக்தி பரவசமடைந்த பக்தர்கள்...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு கோயில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு கோயில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதை அடுத்து தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.
நீலவெளி ஸ்ரீ சீதாளதேவி மகா மாரியம்மன் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நீலவெளி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதாளதேவி மகா மாரியம்மன் திருக்கோயில். இங்கு பக்தர்களில் வேண்டும் அனைத்து நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆகையால் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு வேண்டுதல்களை வைத்து வருகின்றனர்.

சித்திரை திருவிழா
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீமிதி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தீமிதி திருவிழா நேற்றிரவு வெகுவிமரிசையாக விமர்சையாக நடைபெற்றது. 39 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடரும் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சியும் நடைபெற்று வந்தன.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. குப்பநாயக்கன் குளம் சிவன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி பால்குடம் எடுத்தும் அலகு காவடி எடுத்தும் மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியது. அடுதனை அடுத்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை தோளில் தூக்கியும், அலகு காவடி எடுத்த பக்தர்கள் தீக்குழியில் நடந்து வந்தும் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். தீக்குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க நடந்து சென்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பெரம்பூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேரழந்தூரில் ஸ்ரீ ஏரிக்கரை மாரியம்மன் ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில்
இதே போன்று குத்தாலம் அருகே தேரழந்தூரில் ஸ்ரீ ஏரிக்கரை மாரியம்மன் ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 16 அடி வாயில் அழகு குத்தி பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் மேலையூர் கிராமத்தில் புகழ்வாய்ந்த ஏரிக்கரை மாரியம்மன், ஸ்ரீ கம்பர் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்களின் தீமிதி திருவிழாவானது கடந்த ஏப்ரல் 16 -ஆம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பூத்தட்டு வீதி உலா, பூச்சொரிதல், சக்தி கரகம் அம்பாள் வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
16 அடி அலகு காவடி
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் ஆணைகுள கரையில் இருந்து சக்தி கரகம் முன் செல்ல 16 அடி அலகு காவடி, கூண்டு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேள தாள மங்கல வாத்தியங்கள், வான வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் சிறப்பு அலங்காரத்தில் தீ குண்டத்தின் எதிரே பக்தர்களுக்கு அருள் பாலித்த மாரியம்மன் காளியம்மனுக்கு ஆலய அர்ச்சகர் ராஜா மணிகண்டன் மகா தீபாராதனை காண்பித்தார். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தேரழுந்தூர் கிராமவாசிகள், கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.






















