வல்லக்கோட்டை முருகன்: மாசி கிருத்திகை சிறப்பு! வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்! பக்தர்கள் கூட்டம்!
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் மாசி கிருத்திகை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு மாசி மாத கிருத்திகையினை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.
அருணகிரிநாதரால் ஏழு திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு, சொந்த வீடுமனை கிடைப்பதால் வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன் என்ற சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
மாசி கிருத்திகை உற்சவம்
பகீரத மன்னன், இந்திரன், துர்வாச முனிவர், சிருங்கி முனிவரின் சீடர்கள் வந்து வணங்கி அருள்பெற்ற தலமாய் இத்திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு பிரபல சினிமா நடிகர்களும், சின்னத்திரை கலைஞர்களும், அரசியல் பிரமுகர்களும் வந்து வழிபட்டு வளர்ச்சிடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளை முன்னிட்டு இங்கு அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு மூலவருக்கு பால் தயிர் மஞ்சள் விபூதி முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
உற்சருக்கு அபிஷேம் செய்யப்பட்டு அஷ்டோத்திர அர்ச்சனை செய்யப்பட்டது. காலை 6 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் வந்து வல்லக்கோட்டை முருகனை வழிபட்டனர்.
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் செய்திருந்தனர்.























