Masi Magam: மாசி மகம் என்றால் என்ன? எப்போது? கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
Masi Magam: மாசி மகம் அனைத்து தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளாகும். மாசி மகம் நன்னாளில் கிரிவலம் செல்வதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.
மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியை போலவே மாசி மகமும் மிகவும் சிறப்பான நாட்கள் ஆகும். இந்த நாளில் திருத்தலங்களை கிரிவலம் வந்து வழிபட்டால் நமது பாவங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
மாசி மகம் என்றால் என்ன? எப்போது? (Masi Magam 2024 Date & Time)
தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதங்களில் மாசி மாதமும் ஒன்றாகும். இந்த மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே மாசி மகம் என்று கொண்டாப்பட்டு வருகிறது.
மாசி மாதம் தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான மாசி மகம்(Masi Magam 2024 Date) வரும் 24ம் தேதி ( சனிக்கிழமை) வருகிறது. வரும் பிப்ரவரி 23ம் தேதி மாலை 4.55 மணி முதல் வரும் 24ம் தேதி மாலை 6.51 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது. இந்த பௌர்ணமி நன்னாளில் மகம் நட்சத்திரமானது வரும் 23 ம் தேதி ( வெள்ளிக்கிழமை) இரவு 8.40 மணி தொடங்கி, அடுத்த நாள் 24ம் தேதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் வருகிறது. அந்த நேரமே மாசி மகம் நேரம் ஆகும்.
மாசி மகம் சிறப்புகள் என்ன?
பொதுவாக மற்ற நன்னாட்கள் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். ஆனால், மாசி மகமானது அனைத்து தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளாகும். ஆலய வழிபாடு மட்டுமின்றி பித்ருக்களுக்கான கடன்களை நிறைவேற்றுவதற்கும், முன்னோர்களை வழிபடுவதற்கும் மிகவும் சிறந்த நாளாகவும் அமைந்துள்ளது. மாசி மகம் நன்னாளில் புனித நீராடுவதற்கும், திருத்தலங்களுக்கு சென்று வழிபடவும், பரிகாரங்கள் செய்யவும் சிறப்பு வாய்ந்த நாளாகவும் அமைகிறது.
கிரிவலம்:
மாசி மகம் நன்னாளில் பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நன்னாளில் கிரிவலம் சென்றால் பாவங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும். கிரிவலம் செல்வதற்கு வரும் பிப்ரவரி 23ம் தேதி மாலை 5 மணி முதல் அடுத்த நாளான 24ம் தேதி ( சனிக்கிழமை) மாலை 6.30 மணி வரை உகந்த நேரம் ஆகும்.
மாசி மகம் நன்னாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதன் காரணமாக, திருவண்ணாமலையில் சிவபெருமானை தரிசித்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் செய்யப்பட உள்ளது.
மாசி மகம் பலன்கள் என்னென்ன?
மாசி மகம் நன்னாளில் கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை ஆகும். மேலும், கடன் பிரச்சினைகள் நீங்கி, செல்வம் பெருகும் என்பதும், குழந்தை பேறு பாக்கியம் உண்டாகும் என்பதும் நம்பிக்கை ஆகும்.