15 ஆண்டுக்கு பின் காவிரி சங்க கடற்கரையில் எழுந்தருளிய சுவேதாரண்யேஸ்வரர் - பரவசமடைந்த பக்தர்கள்
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமயக்குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவபெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
அவ்வகையில் இவ்வாண்டு இந்திர பெருவிழா பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள பிரம்மாண்ட கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பின்னர் இயந்திரப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக கொடிமரம் முன்பு விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் தோன்ற கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது தொடர்ந்து விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள், சண்டிகேசருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய திருவிழாக்களாக வரும் பிப்ரவரி 25 -ஆம் தேதி அகோர மூர்த்தி பூஜையும், மாலை சகோபரம் எனப்படும் தெருவடைச்சான் வீதி உலாவும், பிப் 27 -ஆம் தேதி திருக்கல்யாணம், பிப் 29 -ஆம் தேதி திருத்தேர் உற்சவம், மார்ச் 3-ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் தலைமையில் கோயில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். இந்நிலையில் இந்திர விழாவை ஒட்டி பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் சுவாமி எழுந்தருளி மாசி மாத தீர்த்தவாரி நடைபெற்றது.
மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோயிலில் இந்திர விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாசி மகதை அடுத்து காவிரி சங்கமத்தில் சுவேதாரண்ய சுவாமி அம்பாள், அஸ்தி தேவர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள், அஸ்தி தேவர் வீதியுலாவாக பூம்புகார் காவிரி சங்கமத்துறைக்கு எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு வாசனை திரவியபொடி, பால், தயிர், தேன், சர்க்கரை, மஞ்சள் பொடி, சந்தனம், பன்னீர் ஆகியவை உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அஸ்திரதேவர் கடலில் தீர்த்தம் கொடுக்க அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி அம்பாளை தரிசித்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் அஸ்திர தேவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாக திருவெண்காடு கோயில் இருந்து மாசி மாக தீர்த்தவாரி வழிபாடு பூம்புகார் சங்க கடற்கரையில் நடைபெறாத நிலையில் இன்று 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தீர்த்தவாரியால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.