![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maha Shivaratri 2023: இன்று மகாசிவராத்திரி..! சிவாலயங்களில் இரவு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள்..! பரவசத்தில் பக்தர்கள்..!
வருஷ சிவராத்திரி என்று பக்தர்களால் கொண்டாடப்படம் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதால் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
![Maha Shivaratri 2023: இன்று மகாசிவராத்திரி..! சிவாலயங்களில் இரவு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள்..! பரவசத்தில் பக்தர்கள்..! Maha Shivaratri 2023 Festival Celebrated Today February 18th in honour of lord Shiva Maha Shivaratri 2023: இன்று மகாசிவராத்திரி..! சிவாலயங்களில் இரவு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள்..! பரவசத்தில் பக்தர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/3e994f1a03b1a985c48467ff1543a7e31676650624352333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகின் ஆதியாக போற்றப்படும் எம்பெருமான் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது மகாசிவராத்திரி. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே வருஷ சிவராத்திரி என்றும், மாசி மகாசிவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. மாசி மாத தேய்ப்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரி ஆகும். வருஷ சிவராத்திரி என்று அழைக்கப்படும் இன்றைய சிவராத்திரி இரவில் சிவபெருமானை வணங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி:
சிவராத்திரி பண்டிகையை ஒட்டி சிவாலயங்களில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. இன்று சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் இரவுகளில் சிவாலயங்களுக்கு சென்று விடிய, விடிய நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான திருவண்ணாமலை ஆலயம் உள்பட அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. நான்கு கால பூஜைகளில் முதல் கால பூஜை மாலை 9 மணிக்கும், 2ம் கால பூஜை 12 மணிக்கும், 3வது கால பூஜை அதிகாலை 3 மணிக்கும், நான்காம் கால பூஜை காலை 6 மணிக்கும் நடைபெற உள்ளது.
சிறப்பு பூஜைகள்:
ஒவ்வொரு சிவாலயங்களில் வேறு, வேறு நேரங்களிலும் இந்த ஜாம பூஜைகள் நடத்தப்படும். தைப்பூசத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாடும் பெரிய பண்டிகையாக சிவராத்திரி உள்ளது. ஆலயங்களுக்கு இன்று இரவு முதல் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் முக்கிய ஆலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சிவாலயங்கள்:
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம், திருவொற்றியூரில் உள்ள தியாகராஜர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் இதர புகழ்பெற்ற கடலூர் திருவதிகை வீரட்டானேசுவரர் சிவன் ஆலயம், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதசுவாமி ஆலயம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம், புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்படும். பக்தர்கள் மேற்கண்ட ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை வணங்குவதற்கும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று சிவராத்திரி மட்டுமின்றி சனிப்பிரதோஷம் என்பதால் கூடுதல் சிறப்புடைய நாளாக பக்தர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க: Thanjavur Big Temple: யார் அந்த தொப்பி வைத்த வெளிநாட்டவர்..? - அதிசயங்கள் சூழ்ந்த தஞ்சை பெரிய கோயில்
மேலும் படிக்க:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)