மேலும் அறிய
மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று! சுவாமி, மீனாட்சியம்மன் புறப்பாடு, தரிசன நேரம் இதோ!
பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக தலையில் தங்க மண்கூடை அலங்காரத்தில் சுவாமியும், மீனாட்சியம்மனும் புட்டுதோப்பிற்கு வந்தனர்.

சுவாமி மற்றும் மீனாட்சியம்மன்
Source : whats app
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா - இன்று மதியம் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறவுள்ள நிலையில் கோயில் அம்மன், சுவாமி சன்னதி நடை சாத்தப்பட்டது.
சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்
சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் லீலைகளாக நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், நாரைக்கு மோட்சம் அளித்தல், மாணிக்கம் விற்றல், தருமிக்கு பொற்கிழி அருளியது, உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், வளையல் விற்றல், நரியை பரியாக்கிய லீலைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மதியம் சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் இன்று அதிகாலையில் கோவிலில் இருந்த புட்டுத்தோப்புக்கு புறப்பட்டனர்.
புட்டுத்தோப்பில் சுவாமி, அம்மனும் எழுந்தருளினர்
சுந்தேரஸ்வரர் பிட்டுக்கு மண் சுமக்கும் லீலைக்கு புறப்படுவதற்காக தலையில் தங்க மண் கூடையுடன் பிரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும், மீனாட்சியம்மனும் புட்டுதோப்புக்கு புறப்பட்டனர். முன்னதாக அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சிம்மக்கல் பகுதியில் உள்ள மண்டபத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பின்னர் மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதியம் 1.35 மணி முதல் 1.55 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுவுள்ளது. இந்த உற்சவம் முடிந்து இரவு சுவாமியும், அம்மனும் கோவிலுக்கு வந்தடைவர். இதன் காரணமாக கோயில் சுவாமி, அம்மன் சன்னதி நடை சாத்தப்பட்டுள்ளது. இன்று பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை மதியம் 3 முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்கவும்




















