Kulasai Dasara 2023: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
மக்களுக்கு முத்து (அம்மை) போட்டதை ஆற்றி (இறக்கி) எடுத்து காப்பாற்றியதால் `முத்து+ஆற்று+ அம்மன்' என்றாகி, `முத்தாரம்மன்’ என பெயர் ஆனது.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.தூத்துக்குடி மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் உள்ள மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி 10 நாள்கள் விரதமிருந்தும், வேடமணிந்தும் தசராவில் கலந்துகொள்வார்கள்.
இத்திருவிழாவின் 10-ம் நாள் திருவிழாவான மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண மாநிலம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் குலசையில் குவிந்துவிடுவார்கள். இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள். பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டது. மக்களுக்கு முத்து போட்டதை ஆற்றி எடுத்து காப்பாற்றியதால் முத்தாரம்மன் என பெயர் ஆனது. சகல துன்பங்களையும் நீக்கி வரமருள்வதால்தான் விரதமிருந்து வேடமணிந்து அம்பிகையின் அருளைப் பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
காளி வேடம் போடுற பக்தர்கள் 41 நாட்களும் மற்ற வேடம் போடும் பக்தர்கள் தசரா திருவிழா கொடியேறிய நாளில் இருந்து மாலை போட்டு 10 நாள் விரதம் கடைப்பிடிச்சு அவரவர் நேர்த்திக்கடனாக நினைச்ச வேடத்தைப் போடுவார்கள். இந்த விரத நாள்கள்ல ஒரு நேரம் மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிடுவாங்க. மற்ற நேரங்களில் பாலும், பழமும்தான்.காளி வேடம்தான் பெரிய வேடம். முதல்ல முகத்துக்கு பவுடர், சாயம் பூசி அடுத்ததா சேலை கட்டி ஜடை முடியை தலையில் கட்டி, தலைக்கு கிரீடம் வச்சு கண்ணுக்கு வெள்ளி கண்மலர் பூட்டி, வாயில் வெள்ளி வீரப்பல் வைத்து கடைசியாக காலுக்கு சலங்கை கட்டுவார்கள்.கையில் திரிசூலம் ஏந்தி வீட்டில் அம்பாளுக்கு பூஜை செய்து தெருக்கள், பஜார்களில் தர்மம் எடுத்து, அந்தக் காணிக்கையை உண்டியலில் போடுவார்கள்.
முதல்முறை மாலை போடும் பக்தர்கள் பலவருசஷமா கோயிலுக்கு தொடர்ந்து மாலை போட்டுவரும் குருசாமியிடம் கேட்பார்கள். அம்பாளிடம் வாக்கு கேட்டு அம்பாள் என்ன வேடம் போடச் சொல்கிறாளோ அந்த வேடத்தைப் போட்டு தர்மம் எடுத்து கோயிலுக்கு வருகிறார்கள் பக்தர்கள். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அம்பாளுக்கு நேர்ந்துகொண்ட வேடம் அல்லது குருசாமிகள் வாக்கு சொன்ன வேடம் போட்டு 7 வீடு, 11 வீடு, 21 வீடு, 51 வீடு என தங்கள் என்னப்படி அத்தனை வீடுகளில் தட்டு ஏந்தி தர்மம் எடுக்க வேண்டும்.
குறவன், குறத்தி, அம்மன், ராஜா, ராணி, லெட்சுமி, விநாயகர், காளி, சிவன், பார்வதி, ராமர் , லெட்சுமணர், அனுமர், கிழவி, கிழவன், போலீஸ், பிச்சைக்காரன், பெண் வேடம்… எனப் பல வகை வேடங்களை பக்தர்கள் போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்’’ என்றனர். மனமுறுகி வேண்டிக்கொண்டு தசாரா திருவிழாவில் மாலை போட்டு வேடமணிந்து முத்தாரம்மனை தரிசித்தால் அடுத்த ஆண்டு தசராவுக்குள் பலன் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இந்த ஆண்டு வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 24-ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.தசரா வேடப் பொருட்கள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகளில் தசரா வேடப்பொருள்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.