Krishna Jayanthi vs Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தியும், கோகுலாஷ்டமியும் ஒன்றா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Krishna Jayanthi and Gokulashtami Difference: கிருஷ்ண ஜெயந்தியும், கோகுலாஷ்டமியும் ஒன்றா? இரண்டிற்கும் என்னென்ன வேறுபாடுகள் என்பதை கீழே காணலாம்.

பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றாக இருப்பது கிருஷ்ணர் அவதாரம். கம்சனை வதம் செய்வதற்காகவும், பூமியில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் இந்த அவதாரத்தை அவர் எடுத்தார். கிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இதை சிலர் கோகுலாஷ்டமி என்றும் கூறுவார்கள். கிருஷ்ண ஜெயந்தியும், கோகுலாஷ்டமியும் இரண்டும் ஒன்றா? அல்லது இரண்டும் வேறு? வேறா? என்பதை கீழே காணலாம்.
கிருஷ்ணர் வரலாறு:
முன்னொரு காலத்தில் போஜகுல மக்களின் அரசனாக இருந்தவர் உக்ரசேனன். இவரது மகன் கம்சன். இவர் பல கொடிய தீய எண்ணங்களை கொண்டவனாக திகழ்ந்தார். இவரது சித்தப்பா மகள்தான் தேவகி. வசுதேவர் - தேவகி இருவரையும் திருமணம் முடிந்த கையுடன் தனது ரதத்தில் கம்சன் ஒரு முறை அழைத்துச் சென்றான். அப்போது, அங்கே கேட்ட அசரிரீ தேவகியின் வயிற்றில் பிறக்கும் 8வது ஆண்குழந்தையால் உனக்கு மரணம் என்று சொல்லியது.
இதைக்கேட்ட கம்சன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று தேவகியை கொல்ல முயன்றான். அப்போது,வசுதேவர் அதைத் தடுத்து 8வது குழந்தையால்தானே ஆபத்து. அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும். நாங்கள் குழந்தை பிறக்கவும் உன்னிடமே தந்து விடுகிறோம் என்று கூறினார். அதை ஏற்ற கம்சன் தேவகியை கொல்லாமல் வசுதேவர் - தேவகி இருவரையும் சிறையில் அடைத்தார்.
கம்சனை கொல்ல அவதாரம்:
பின்னர், அவர்களுக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கம்சன் கொல்ல 8வதாக கிருஷ்ணர் அவதரித்தார். அதற்கு முன்பு வசுதேவர் கனவில் தோன்றி கோகுலத்திற்கு சென்று உனக்கு பிறக்கும் குழந்தையை அஙகே யசோதை என்ற பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு பதிலாக மாற்றி வை என்றும், யசோதைக்கு பிறக்கும் குழந்தையை நீ எடுத்துக் கொண்டு இங்கே வைத்து விடு என்றும் குரல் கேட்டது.

அப்போது, தேவகிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் பகவான் கிருஷ்ணர். அந்த குழந்தையை கனவில் கூறியது போல, கோகுலத்திற்கு கொண்டு சென்று யசோதை அருகே கிடத்திவிட்டு யசோதை அருகே இருந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சிறைக்கு வந்துவிட்டார். இந்த குழந்தை பிறந்து யசோதை குழந்தையை தூக்கிக் கொண்டு மீண்டும் வசுதேவர் சிறைக்கு வரும் வரை காவலாளிகள் மயக்கத்திலே இருந்தனர். சிறைக்கதவுகளும் தானாக திறந்து மூடிக்கொண்டது. இவ்வாறு புராணத்தில் கூறப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி - கோகுலாஷ்டமி வேறுபாடு என்ன?
தேவகி வயிற்றில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியிலும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. குழந்தையாக அவதரித்த கிருஷ்ணரை யசோதையின் குழந்தையாக வசுதேவர் கோகுலத்திற்கு கொண்டு சென்றது அடுத்த நாள். கிருஷ்ணர் கோகுலத்திற்கு சென்று சேர்ந்த நாளே கோகுலாஷ்டமி ஆகும். இதுதான் கிருஷ்ண ஜெயந்திக்கும், கோகுலாஷ்டமிக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

கிருஷ்ண ஜெயந்தி எப்போது?
ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி வரும் ஆகஸ்ட் 16ம் தேதியும், ரோகிணி நட்சத்திரம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதியும் வருவதால் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களுமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணர் இரவில் அவதரித்ததால் இரவில் கிருஷ்ண ஜெயந்தியாகவும், அடுத்த நாள் கோகுலத்திற்கு வந்த நாளை கோகுலாஷ்டமியாகவும் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் பக்தர்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்ப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டு அழகு பார்ப்பார்கள். கிருஷ்ணருக்குப் பிடித்த வெண்ணெய், லட்டு உள்ளிட்ட இனிப்புகள் படைத்து வேண்டிக்கொள்வார்கள். வைணவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடக்கும்.





















