Krishna Jayanthi: மச்ச அவதாரம் முதல் கல்கி வரை.. மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்னென்ன..? பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க..!
காக்கும் கடவுளான விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களும் 10 வித தருணங்களில் உலகை காப்பதற்காக எடுக்கப்பட்டதாக இதிகாசங்கள் கூறுகின்றன.
காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 9வது அவதாரம் கிருஷ்ண அவதாரம் ஆகும். ஆவணி மாதத்தில் கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. நடப்பாண்டில் கிருஷ்ண ஜெயந்தி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது,
இந்த நிலையில், மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1.மச்ச அவதாரம்:
விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். மிகப்பெரிய வெள்ளப்பெருக்கின்போது விஷ்ணு பெருமான் மீன் வடிவத்தை எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த அவதாரமே மச்ச அவதாரம் ஆகும். மச்ச அவதாரம் எடுத்த விஷ்ணு உலகின் முதல் மனிதன் என்று நம்ப்படும் மனுவையும், சில உயிர்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது.
2. கூர்ம அவதாரம்:
கூர்ம என்றால் ஆமை என்று அர்த்தம். விஷ்ணு பெருமான் ஆமை வடிவத்தை எடுத்ததே கூர்ம அவதாரம் என்று கூறப்படுகிறது. பாற்கடலை கடைய பயன்படுத்தப்பட்ட மந்திரசாலா மலை கடலில் மூழ்கியபோது, அது மூழ்காமல் விஷ்ணு எடுத்த கூர்ம அவதாரமே அதை தாங்கிப்பிடித்ததாக புராணங்கள் கூறுகிறது.
3. வராக அவதாரம்:
வராக என்றால் காட்டுப்பன்றி என்று அர்த்தம். அண்டத்துக்குரிய பகுதியின் கீழ் இந்த உலகத்தை எடுத்துச் சென்ற ஹிரன்யஷா அரக்கனை கொல்வதற்காகவே இந்த அவதாரத்தை விஷ்ணு பகவான் எடுத்துள்ளார். தனது வராக அவதாரத்தின் மூலம் ஹிரன்யஷாவை வதம் செய்த பிறகு உலகத்தை மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு வந்தார்.
4. நரசிம்ம அவதாரம்:
மகாவிஷ்ணுவின் முக்கியமான அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்றாகும். விஷ்ணுவின் மிகப்பெரும் பக்தனான பிரகலாதனை காப்பதற்காக பாதி மனிதன், பாதி அரக்க அவதாரம் எடுத்து இரண்யன் எனும் அரக்கனை தனது மடியில் இட்டு அழித்த அம்சமே இந்த நரசிம்ம அவதாரம் ஆகும். நரசிம்ம அவதாரத்தை பற்றி திரைப்படங்களே எடுத்துள்ளனர்.
5.வாமன அவதாரம்:
மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்ட குள்ள மனிதர் அவதாரமே இந்த வாமன அவதாரம் ஆகும். முதல் அடியை ஆகாயத்திலும், இரண்டாம் அடியை நிலத்திலும் மூன்றாவது அடியை மகாபலி மன்னன் தலையிலும் வைத்து அவனை வதம் செய்ததே வாமன அவதாரம் ஆகும். மகாபலி மன்னன் தன் நாட்டிற்கு வருடத்திற்கு ஒரு முறை திரும்ப வருவதே கேரளாவில் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
6. பரசுராம அவதாரம்:
விஷ்ணுவின் 6வது அவதாரம் பரசுராம அவதாரம் ஆகும். மிகவும் பலமிகுந்த ஒருவராக திகழ்ந்தவர் பரசுராமர் என்று இதிகாசங்கள் கூறுகிறது. அவரிடம் இருந்த கோடாரி சிவபெருமானின் வரத்தால் கிட்டியது என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
7.ராம அவதாரம்:
தசரத மன்னனுக்கு மகனாக ராமராக விஷ்ணுபெருமான் அவதரித்ததே ராம அவதாரம் என்று இதிகாசங்கள் கூறப்படுகிறது. இந்தியாவில் ராமரைப் பற்றி பல கதைகள் உள்ளன. இந்த ராம அவதாரம் மூலமாக அவர் ராவணனை வதம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.
8.பலராம அவதாரம்:
மகாவிஷ்ணுவின் 8வது அவதாரமாக கருதப்படுவது பலராம அவதாரம் ஆகும். கம்சனை அழிக்கப் பிறந்த கண்ணனுக்கு முன் பிறந்த குழந்தையே பலராமன் என்றொரு கதையும் உண்டு. பலராம அவதாரத்தை வட இந்தியாவில் புத்த அவதாரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
9.கிருஷ்ணர் அவதாரம்
மகாவிஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ணர் அல்லது கண்ணன் அவதாரம் ஆகும். கம்சனை அழிக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே கிருஷ்ணர் என்று இதிகாசங்கள் கூறுகின்றன. மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போர்க்களத்தில் வழங்கிய உபதேசங்களே பகவத் கீதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
10.கல்கி:
கலியுகம் என்று சொல்லப்படும் தற்போது நடந்து வரும் யுகத்தில் மகாவிஷ்ணு எடுக்கப்போகும் 10வது அவதாரம் கல்கி அவதாரம் என்று கூறப்படுகிறது. தீமைகள் தலைதூக்கி மக்கள் அவதிக்குள்ளாகும்போது ஒரு வெள்ளை குதிரையில் பெரிய வாளோடு மக்களை காக்க மகாவிஷ்ணு எடுக்கப்போகும் 10வது அவதாரமே கல்கி அவதாரம் என்று நம்பப்பட்டு வருகிறது.