கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவீதி உலா
சிம்ம வாகன திருவீதி உலாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து தேங்காய், பழம் பிரசாதத்துடன் சுவாமியை மனதார வழிபட்டனர்.
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவீதி உலாவில் சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில், கல்யாண வெங்கட்ரமண சுவாமி நாயுடு மஹால் திருமண மண்டபத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான புதிய சிம்ம வாகனத்தில் மேல தாளங்கள் முழங்க திரு வீதி உலா காட்சி அளித்தார்.
நாயுடு மஹால் திருமண மண்டபத்தின் சார்பாக புதிதாக இரண்டு லட்சம் மதிப்பிலான புதிய சிம்ம வாகனத்தை ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய நிலையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி புதிய சிம்ம வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த சிங்க வாகன திருவீதி உலா மீண்டும் ஆலயம் குடிபுகுந்தது.
சிம்ம வாகன திருவீதி உலாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து தேங்காய், பழம் பிரசாதத்துடன் சுவாமியை மனதார வழிபட்டனர். இன்றைய சிம்மவாகன நிகழ்ச்சியின் ஏற்பாட்டை நாயுடு மஹால் திருமண மண்டப உரிமையாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு அபிஷேகம்.
நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய தேவஸ்தான ஆலயத்தில் நவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கன்னியா பரமேஸ்வரி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கன்னியா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.